‘மெட்ரோ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுத அவரது உதவியாளர் எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ள படம். ‘மெட்ரோ’ படத்தில் செயின் பறிப்பு திருடர்களை பற்றி டீட்டைலாக பேசிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தில் ‘ராபர்’கள் பற்றி பேசி உள்ளார். திருடர்களின் நோக்கம் திருடுவது மட்டுமாக இருக்கும், ராபர்களின் நோக்கம் திருடுவதோடு திருட்டு கொடுப்பவர்களை டார்ச்சர் செய்து மகிழ்வதுமாகும்.
அப்படியான ராபர்களின் கதை இது. படித்த இளைஞர் சத்யா கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வருகிறார். சென்னை வந்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று வருகிற அவருக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. கிடைக்கிற வேலையைச் செய்கிறார். ஆனால் அவர் விரும்பும் ஆடம்பர வாழ்க்கைக்கு அந்த சம்பளம் போதுமானதாக இல்லை. அவருக்கு பிடித்த பெண்ணும் பண ஆசை பிடித்தவளாக இருக்கிறாள். இதனால் பணத் தேவைக்காக ராபராக மாறுகிறார் சத்யா.
ராபர்களின் நெட் ஒர்க்கில் இணைந்ததும் அவரது வாழ்க்கை மாறுகிறது. பணம் கொட்டுவதால் ராஜபோக வாழ்க்கை வாழ்கிறார். ராபர்களின் தலைவர் டேனியல் ஆனி போப்பையும் பகைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் ஒரு அசைன்மெண்டின்போது ஒரு பெண் இறந்து விட இப்போது கொலைகாரனாகவும் மாறிவிடுகிறார் சத்யா. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
சென்னை நகரில் தினந்தோறும் நடக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்களுக்கு பின்னால் பாதிக்கப்படும் பெண்களின் பார்வையில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் திருடனின் பார்வையில் செல்லும் படம் இது. ஆனந்த கிருஷ்ணனின் பரபரப்பான திரைக்கதை,என்.எஸ்.உத்தியகுமாரின் ஒளிப்பதிவு, ஜோஹன் ஷேவனேஷின் பின்னணி இசை எல்லாமும் இணைந்து ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர் படம் தந்திருப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு குறித்த ஒரு முக்கிய மெசேஜையும் தருகிறது படம்.
மெட்ரோ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற சத்யாதான் இந்த படத்தின் நெகட்டிவ் நாயகன். அவர் கண்களிலேயே பாதி கொடூரம் தெரிந்து விடுவதால் மீதியைத்தான் அவர் நடிக்க வேண்டியது இருக்கிறது. ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுவதை படிப்படியாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் சத்யா.
இதுவரை காமெடியனாகவே நடித்து வந்த டேனியல் ஆனி போப் முதன் முதலாக கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். இனி அவர் வில்லன் டிராக்கிலும் பயணிக்கலாம். ஒரு காமெடியனை வில்லனாக மாற்றுவதில் நிறைய சிக்கல் இருக்கிறது. ஆனால் இந்த திரைக்கதை அதை சரியாக செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக ஜெயபிரகாஷ் பிரமாதமாக நடித்திருக்கிறார். சத்தம் போட்டுகூட பேசாத ஜெயபிரகாஷ் இதில் மகளுக்காக எதையும் செய்யும் தந்தையாக மாறி இருக்கிறார். அவரது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். தீபா ஷங்கர் வழக்கமான அம்மாதான் என்றாலும் படத்தை சரியாக முடித்து வைக்கும் முக்கியமான கேரக்டர் அவருக்கு.
‘எல்லோருமே கெட்டவர்கள்தான் என்ன வித்தியாசம் மாட்டிக் கொண்டவர்கள், மாட்டிக் கொள்ளாதவர்கள்’. ‘ஒரு மகன் எவ்வள சம்பாதிக்கிறான் என்று எந்த தாயும் பார்ப்பதில்லை. எப்படி ஒழுக்கமாக இருக்கிறான் என்றுதான் பார்ப்பார்கள்’. இப்படியான பல நறுக் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
சமூக விரோதிகள் எப்படி உருவாகிறார்கள், எப்படி அழிகிறார்கள். இந்த இரண்டுக்கும் பின்னால் இருக்கும் நெட் ஒர்க் என்ன என்பது பற்றி டீட்டைய்லாக படம் பேசி இருக்கிறது. முதல் படத்திலேயே தரமான இயக்குனராக தன்னை நிலை அடையாளப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் எஸ்.எம்.பாண்டி.
வன்முறை காட்சிகளை குறைத்திருக்கலாம், பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்பது மாதிரியான சில குறைகளும் உண்டு.
பத்திரிகையாளர்களுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்பார்கள். பத்திரிகையாளர் கவிதா தயாரித்துள்ள படமும் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆண்களுக்கு பாடத்தையும் பெண்களுக்கு பாதுகாப்பையும் கற்பிக்கிறார் இந்த ராபர்.