தினமலர் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் கவிதா, திரைப்பட நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்னெவே சாக்லேட், கொலை விளையும் நிலம், சாக்லெட், அப்பா உள்ளிட்ட குறும்படங்களை தயாரித்தார். சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் திரைப்படத் தயாரிப்பாளராகி உள்ளார். ராபர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இது சென்னையில் நடைபெறும் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களின் பின்னணியில் தயாராகி உள்ளது. மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதோடு இணை தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த சத்யா இதிலும் நடிக்கிறார். ஜோகன் இசை அமைத்துள்ளார், தீபா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாண்டி இயக்கி உள்ளார். வருகிற 14ம் தேதி படம் வெளியாகிறது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் எஸ்.தாணுவும், இயக்குனர் கே.பாக்யராஜும் பாடல்களை வெளியிட பெண் பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கவிதா பேசியதாவது: எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.
எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை எனக்கு 22 வருடத்திற்கான உழைப்பை கொடுத்திருக்கிறது. தியாகராஜன் சாரிடம் ஆரம்பித்து நான் பலரின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் மேடைக்கு மேடை என்னைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்து இந்தளவிற்கு கொண்டு வந்தார்களோ, அதேபோல் இந்த மேடையில் இருப்பவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தியாகராஜன் சார் வீட்டில் தான் நான் வளர்ந்தேன். எந்த ஒரு நல்லதாக இருந்தாலும் அவர் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. கனடாவில் இருந்தாலும் ரம்பாவும் நானும் நெருக்கமாக தான் உள்ளோம். ரம்பாவின் அம்மா ஒரு இனிப்பு பண்டம் இருந்தாலும் வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள். என்னை பத்திரிகையாளராக பார்க்காமல் அவர்கள் வீட்டில் இடம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ஒரு ஊழியர் என்ன முயற்சி எடுத்தாலும் எந்த நிறுவனம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும்? நான் முதன் முதலில் குறும்படம் எடுக்க நினைத்த போது, பத்திரிகையாளராக வந்தோம், சென்றோம், வேலையைப் பார்த்தோம் என்றில்லாமல் நான் குறும்படம் எடுக்க போகிறேன் என்று என் பாஸிடம் கூறினேன். உடனே ரூ.20 ஆயிரம் கொடுத்து ஊக்குவித்தது தினமலர் தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியாக வேண்டும்.
குழந்தைகளுக்கான பாலியல் விஷயத்தை மையமாக வைத்து சாக்லேட் என்ற குறும்படம் தயாரித்தேன். 2 வதாக தென் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து கொலை விளையும் நிலம் என்ற டாக்குமென்டரி படத்தை தயாரித்தேன். அப்படத்தை விகடன் செய்தியாளராக இருந்த ராஜீவ் காந்தி இயக்கினார்.
அடுத்து ‘எண்ணம் போல் வாழ்க்கை’ இது கொரணா காலத்தில் ஆல்பம் பாடலாக தயாரித்தேன். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா ஹி1 ரெகார்ட்ஸ் மூலம் வெளியிட்டார். சுமார் 20 கலைஞர்கள் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் உதவி புரிந்தார்கள். தொடர்ந்துநடிகர் ஜனகராஜ் அவர்கள், 700 படங்கள் நடித்திருக்கிறார். அவரிடம் தாத்தா என்ற குறும்படத்தின் கதையை நரேஷ் இயக்குனர் கூறினார். ஜனகராஜ் சாரிடம் இந்த கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், நான் அப்படியே எடுத்து வைத்து விடுவேன் என்று நான் கூறிய பிறகு ,அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வரவேற்பை பெற்றது.
இந்த சமயத்தில், சென்சார் போர்டு உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது அதையும் என் பாஸிடம் கூறினேன். அவர் அதற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிறகு சென்சார் போர்டு உறுப்பினர் ஆனேன். அதன் பிறகு, எல்லா ஊர்களுக்கும் ராஜா சார் வந்து விட்டார். ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் வரவில்லை. ராஜா சாரை எங்கள் ஊர் மக்களுக்காக அழைத்து வர வேண்டும். அவரை வைத்து எங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் தினமலர் மீடியா பார்ட்னராக இருந்து பெரும் உதவி புரிந்தது.
என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
நான் ஒரு படம் தயாரித்து இருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று பாஸிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராகஇருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்து செல் என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கும் மிக்க நன்றி.
ராபர் படத்தை எடுத்துக் கொண்டால், ஆனந்த் மற்றும் இப்படக் குழுவினரை விதார்த் மூலமாக தான் தெரியும். ஒரு சிறிய படம் தான் மக்கள் இடையே பெரிய விமர்சனத்தையும் வியாபார ரீதியான வளர்ச்சியையும் கொடுக்கிறது. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறேன்? எப்படி வெற்றியடைய வைக்கப் போகிறேன் என்று மிகவும் கண்கலங்குவார்கள். ஒரு படம் தயாரித்து வெளியிடுவதில், கலைஞர்களை அழைப்பதில் இருந்து, நிகழ்ச்சி வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்ப்பது என்று அந்த படம் வெளியாகும் வரை எவ்வளவு வேலைகள் பின்னால் இருக்கிறது?. பெரிய படம், பெரிய நடிகர்கள் என்றால் நாம் செய்திகளை சேகரிப்போம் ஆனால் ஒரு சிறிய படத்திற்கு யார் இதை செய்வார்கள்? அந்த வகையில்,
ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். ராபர் படம் மட்டுமல்லாது இனி அடுத்தடுத்து நிறைய படங்களோடு பயணிக்கப் போகிறோம். நாம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதில் உழைப்பும், உண்மையும்,உறுதியாக இருந்தால் நாம் நினைத்த இலக்கை அடையலாம் என்ற மிகப்பெரிய அனுபவத்தை இந்த படம் எனக்கு கொடுத்திருக்கிறது.
பெண்கள் தானே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். எந்த பக்கமும் திரும்பாமல், நம்முடைய பயணம் என்ன? அடுத்த அடி என்ன? எதை நோக்கிப் போக போகிறோம்? என்பதை யோசித்தால் எந்த தடங்கலையும் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடைய பாதையும் பயணமும் வெற்றியை நோக்கி மட்டும் தான் போகும். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள் இருப்பினும் இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இந்த படம் மூலம் நான் ஒரு புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தப் பயணமும் நிச்சயமாக ஒரு பாதையை போட்டு கொடுத்திருக்கிறது. உங்கள் துணையோடு இந்த பாதையில் பலரை கைபிடித்து அழைத்துச் செல்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.