இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் ‘பெருசு’. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை ‘பெருசு’ படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த இளங்கோவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. என்றார்.
இயக்குநர் இளங்கோ ராம், “படத்தை நல்லவிதமாக கொண்டு போய் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கும் மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “நானும் ராம் சாரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்லார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சார் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’.
மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். பாலாஜி சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நானும்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக எழுதப்பட்ட கதை இது. உங்கள் ஆதரவு தேவை”என்றார்.