இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் ‘வருணன்’. இதில் நாயகனாக நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷ்யந்த் , நாயகியாக கேப்ரியல்லா ஆகியோர் நடித்துள்ளனர். ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போபோ சசி இசை அமைத்துள்ளார், ஶ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாக்கை பிலிம்ஸ் வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அன்புச்செழியன் பாடல்களை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: வருணன் படத்தை பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்த தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும். அவருடைய உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகிறது.
வருணன் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நிறைய ஓடிடி தளங்கள் இருந்தாலும் சினிமா வியாபாரம் என்பது சுமார் தான். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் ‘வருணன்’ படத்தை வெளியிடுகிறார்கள். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.