கதையின் நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார்.
விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தெர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு காரணம் விமலின் மலேசிய நண்பர் ராமர் சொல்லும் ஒரே ஒரு பொய். அது என்ன? அது என்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை காமெடியாக சொல்லும் படம்.
இது மாதிரியான கேரக்டரில் ஏற்கெனவே பல படங்களில் விமல் நடித்திருப்பதால் இந்த படத்தில் ஈசியாக ஊதிதள்ளிவிட்டுப்போகிறார். அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.
விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரிக்கும் இந்த கேரக்டர் புதிதல்ல. முடிந்தவரை மக்களை சிரிக்க வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவுக்கு பெரிதாக வேலை இல்லை. வருகிறார், காதலிக்கிறார், டூயட் பாடுகிறார். விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் படத்தை கலர்புல்லாக கொடுத்திருக்கிறார். இயக்குனர் கே.வி.நந்தா வழக்கமான கதையை புதிதாக தர முயற்சித்திருக்கிறார். இந்த கதையின் இடையில் சீமகருவேப்பிலை மரத்தின் கொடுமை பற்றி தெளிவாக பேசி இருக்கிறார்.
காமெடி கலாட்டாவுடன் கருத்து சொல்லும் படமாகவும் உருவாகி உள்ளது.