எல்.ஐ.சி அதிகாரி ஹரி கிருஷ்ணனும், தாய், தந்தையை இழந்த கிராமத்து பெண்ணான லியோமோல் ஜோசும் திருமணத்திற்குப் பிறகு சென்னையிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறார்கள். காதல், ஊடல், கூடல் என இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்போது, ஹரி தன் முன்னாள் காதலி லாஸ்லியாவுடன் தனியாக ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதும் அவர் ஒரு பெண்பித்தர் என்ற உண்மையும் பூரணிக்குத் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை த்ரில்லராக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
கணவனோடு காதலில் உருகுவது, தேவைப்படும் இடங்களில் வெகுண்டெழுவது, மர்மத்தைத் தனக்குள் புதைத்து வைத்துக்கொண்டு, அதை வெளிக்காட்டாத முகபாவனையில் நடமாடுவது, தேவையான இடங்களில் மட்டும் அதை நுணுக்கமாக வெளிப்படுத்துவது எனப் படம் முழுவதுமே அடர்த்தியோடும் வீரியத்தோடும் உலாவும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார் லிஜோமோல் ஜோஸ்.
இரண்டாம் பாதியில் வரும் லாஸ்லியா தனது கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். ஹரி கிருஷ்ணன் நடிப்பில் குறைகளில்லை. காவலராக வரும் ராஜிவ் காந்தி சுதேஷ், தாரணி ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
நுணுக்கமான ப்ரேம்களாலும் கோணங்களாலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ச.காத்தவராயன். வசந்தாவின் பின்னணி இசை திரைக்கதையின் வீரியத்தை கூட்டுகிறது. ஒரு த்ரில்லர் டிராமாவை எமோஷனோடு தந்திருக்கிறார், அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.