தஞ்சையிலிருக்கும் ஒரு கிராமத்தின் ஊர்த் தலைவர் மகள் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். போலீசுக்கு தெரியாமல் மறைத்து அவளின் சடங்கை நடத்திவிடலாம் என்று கருதும் குடும்பம் இறுதி ஊர்வலத்துக்காகப் பிணத்தை எடுக்க, பிணம் வீட்டை விட்டு நகர மறுக்கிறது. ஊரே திரண்டும் கிடத்திய கட்டிலில் அசைக்க முடியாமல் பிணமாகக் கிடக்கிறாள் லீலா. பிணம் ஏன் நகர மறுக்கிறது, லீலாவின் சாவுக்குக் காரணம் யார் என்பதைப் பேசும் அமானுஷ்யம் கலந்த த்ரில்லர் கதை தந்திருக்கிறார், அறிமுக இயக்குனர் பிபின் ஜார்ஜ் ஜெயசீலன்
முக்கால்வாதி படத்தில் பேயாக நடித்தாலும் மௌனமான அந்தக் கோபச் சிரிப்பினால் நெஞ்சைப் பதற வைக்கிறார் ரூபா கொடுவாயூர். பிணமாக எழந்து உட்கார்ந்து படத்தை ரசிகர்கள் மனதில் உட்கார வைக்கிறார். அம்மாவாக கீதா கைலாசம், கதையின் ஆன்மாவைக் காப்பாற்றும் அற்புதமான நடிப்பைக் கொடுத்துப் படத்திற்கு வலுசேர்க்கிறார்.
காதலனாக நரேந்திரகுமார், அண்ணியாக ஹரிதா ஆகியோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். கதவைக் காட்டிய இடத்தில் மிரட்ட ஆரம்பிக்கும் இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜின் பின்னணி
இசை, முக்கியமான இடங்களில் கதையோடு ஒன்றச் செய்யும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.
ஒரு சின்னக் கிராமம், அதிலும் வீட்டுக்குள் நடக்கும் கதை என்கிற நிலையிலும் கேமரா கோணங்களில் மிரட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்.
ஒரு பெண் தற்கொலை செய்தால் ஊர் என்ன பேசும் என்கிற ஒன்லைன்தான் படம். ‘எமகாதகி’ என்பது ஒற்றை நபர் அல்ல, சமூகம்தான்’ எனப் பிரசார நெடியில்லாமல் பெண்களையே பேச வைக்கிறது எஸ். ராஜேந்திரனின் வசனங்கள்.
பெண்ணுக்கு நீதி கிடைக் அவள் பிணமாகவும் போராடுவாள் என்கிற வலுவான கருத்தை பேசியிருக்கிறது படம்.