தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. மீறிச் சென்றால் செத்து கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பின்பு செத்துக் கிடக்கிறார்கள். 1982ல் இறந்த அழகம் பெருமாளின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். இந்த மர்மத்தை கண்டுபிடிக்க கிளம்புகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். அந்த மர்மம் என்ன அதை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
ஹாரர், த்ரில்லர், அமானுஷ்யம் என பல விஷயங்களை கலந்து பக்கா கமர்ஷியல் படம் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ். தடையை மீறி கடலுக்கு நாயகன் செல்லும்போதே படம் விறுவிறுப்பாக செல்லத் தொடங்குகிறது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அது ரசிகர்களுக்கு படபடப்பையும், பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
ஊரில் யாருக்கு என்ன என்றாலும் பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஷிபுமோன் கதாபாத்திரத்தின் தன்மை, கடல் அட்டை என்ற பெயரில் அவர் நடத்தும் கடத்தல் நாடகம், என சர்வ வல்லமை பொருந்திய தாதாவாக மிரட்டி இருக்கிறார்.
தனது 25வது படம், தனது தயாரிப்பு என்பதால் நடிப்புக்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் காதலியாக வரும் திவ்யபாரதி, வழக்கமாக நாயகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை செய்திருக்கிறார். சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் வில்லத்தன நடிப்பில் கவர்கிறார் சேத்தன். அழகம்பெருமாள், குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கிறார்கள்.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் ஆழ்கடல் மிரட்டுகிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்தை தூக்கி சுமக்கிறது. திரைக்கதையில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருந்தால் ஹாலிவுட் தரத்திலான படமாக வந்திருக்கும்.