உலகின் அற்புதம் தாய். அந்த தாய் அன்பை சொல்லும் படங்கள் ஆயிரம் வந்திருக்கிறது. ஆனாலும் வெவ்வேறு நிலைகளில், களங்களில் சொல்லப்படும் கதை தொகுப்பாக வந்திருக்கிறது இந்த படம். அழுத்தமான கதைகள் மூலம், மனித உறவுகளின் உணர்ச்சி ஆழங்களை ஆராய்ந்து, தாய்மைக்கு அதன் அனைத்து வடிவங்களிலும் எத்தகைய பங்கு இருக்கிறது என்பதை சொல்லும் படம்.
விபச்சாரியை தாயாக கொண்ட ஒரு மும்பை நிழல் உலக தாதா (நட்டி) விபச்சார விடுகளில் தாயை தேடுவது, தனது முதுமையான தந்தை பாரதிராஜா, தாய் வடிவுக்கரசியை புறக்கணிக்கும் மகன்கள், தாயின் உயிர் காக்க கொலையும் செய்ய துணியும் ரியோ ராஜ், தாயன்பு கிடைக்காத ஆட்டோ டிரைவர் சாண்டி மகனால் முதியோர் இல்லத்தில் விடப்பட்ட துளிசியை தாயாக்கி கொள்வது என நான்கு கதைகளிலும் நான்கு அற்புதமான தாயை காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ ஜே.பி. இவற்றுக்கு ஊடாக விஜி சந்திரசேகர் மற்றும் அவர்களது மகள் லவ்லின் அன்பும் இவற்றை இணைக்கும் ஒற்றை புள்ளியென யோகி பாபு. இப்படி தாய்பாசத்தை ஒரு மாலையாக கோர்த்து தந்திருக்கிறார்.
பிரகாஷ் ரீகனின் எழுச்சியூட்டும் இசை தாய்மையை தாலாட்டுகிறது. இசை படத்தின் தாக்கத்தை ஆழப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் பல்வேறு கதைகளுக்கு இடையில் ஒரு பாலமாகவும் செயல்படுகிறது.
நடிப்பு என்று வருகிறபோது பாரதிராஜாவும், வடிவுக்கரசியும் முதலிடம் பிடிக்கிறார்கள். அடுத்து சாண்டி மாஸ்டர், பிறகு ரியோ ராஜ், கடைசியாக நட்டி.
குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த குடும்ப படம்.