புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் மர்மர். ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கி இருக்கிறார். மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பவுண்ட் புட்டேஜ் ஹாரர் பாணியில் வெளியாகி இருக்கிறது.
நான்கு யூடியூப் சேனல் இளைஞர்கள் காத்தூர் கிராமத்தில் உள்ள அமானுஷ்ய கதையை கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அங்குள்ள காட்டுக்குள் மங்கை என்கிற சூனியக்காரியும், 7 கன்னிகள் மலையில் உள்ள தடாகத்தில் பவுர்ணமி நாளில் குளிக்கிறார்கள் என்பதும்தான் அந்த அமானுஷ்ய கதை. மங்கை மற்றும் 7 கன்னிகளை படம்பிடித்து வீடியோ டாக்குமெண்டாக தயார் செய்ய காத்தூர் கிராமத்திற்கே செல்கிறார்கள். கண்டுபிடித்தார்களா? அவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இது ஜவ்வாது மலையில் நடந்த உண்மை கதை என்றும் கூறுகிறார்கள். இவர்களின் பயணத்திற்கு உள்ளூர் பெண் காந்தா உதவி செய்கிறாள். இவர்கள் பயணத்தில் பல அமானுஷ்ய அசைவுகளும், காலடி சத்தங்களும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இவர்கள் பேய் இருக்கிறதா என்பதை ஆராய ஒய்ஜா போர்டை வைத்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். அதற்குப் பின்னால் இவர்கள் கேட்ட கதை உண்மையா? இல்லையா? என்பதுதான் மீதி கதை.
‘பவுண்ட் புட்டேஜ் ஹாரர் பாணியில் கதையை இயக்குனர் கொண்டு செல்லும் புதிய முயற்சியை பாராட்டலாம். ஹாலிவுட், இந்தி சினிமாவில் இந்த மாதிரியான படங்கள் வந்திருந்தாலும் தமிழில் இதுதான் முதல் முறை.
பகல் நேரத்தில் சருகு, இலைகள், மரங்கள் இடையே நடக்கும் பயணம், இரவில் நெருப்பு வெளிச்சம், டார்ச் லைட்டில் என்று கதையை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் படத்தை கொண்டு செல்கிறது ஜோசப்பின் ஒளிப்பதிவு. படத்திற்கு பின்னணி இசை இல்லை. என்றாலும் சிறப்பு சத்தங்கள் பீதியூட்டுகிறது. பயணம் செய்பவர்களுக்கு நேரும் விபரீதங்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. என்றாலும் இரவு நேர காட்டு வழி பயணம் வெறும் டார்ச்லைட் வெளிச்சத்தில் பயணிப்பது எரிச்சலூட்டுகிறது. என்றாலும் இரண்டரை மணி நேரம் திக் திக் பயணம்தான்.