புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் : ‘ஸ்வீட்ஹார்ட்’ தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா

ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள படம் ‘ஸ்வீட்ஹார்ட்’. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வருகிற மார்ச் 14ம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் யுவன் சங்கர் ராஜா பேசும்போது “இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால், முதலில் இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதற்கு பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் இரண்டு பாடல்களை இணைத்தோம். இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு ” என்றார்.

இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில், ” ஜோ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த :ஸ்வீட்ஹார்ட்’ படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது , கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி மேடம் என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்… அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள்” என்றார்.

நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில், ” ஸ்வீட்ஹார்ட் எனக்கு மிகப் ஸ்பெஷலான படம். இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி. மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன். அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று தேர்வானேன். இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.