சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பிறகு, காப்பி ரைட் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. இயக்குனர் ஷங்கர்கூட காப்பி ரைட் பிரச்சனையில் சிக்கி அவரது 6 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, தனுஷ் வழக்குகூட காப்பிரைட் சம்பந்தப்பட்டதுதான்.
இந்த நிலையில் காப்பி ரைட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காப்பிரைட் பிரச்சினைகளை கையாளும் முன்னணி நிறுவனமான KRIA LAW சென்னையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில் திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை நிறுவனங்கள், திரைப்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சினிமாவில் கதை, காட்சி, இசை, பாடல்களில் எழும் காப்பிரைட் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து காப்பிரைட் உரிம நிபுணரும், வழக்கறிஞரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான எம்.எஸ்.பரத் கூறியதாவது: திரைத்துறையினர் மட்டுமல்லாது கலைத் துறையினர்களுக்கு காப்பி ரைட் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பதே பல பிரச்சினைகளுக்கு காரணம். பெரும்பாலானவர்கள் எந்த உரிமத்தையும் திருடுவதில்லை, அறியாமல் செய்து பின்னர் மாட்டிக் கொள்கிறார்கள்.
திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் மற்றும் இசை உரிமைகள் குறித்து குழப்பம் நிலவுகிறது. ஒரு தயாரிப்பாளர் முதலாளியாக இருந்தாலும் படத்தில் பணியாற்றும் இசை அமைப்பாளர்கள், பாடகர்களுக்கு, பாடலாசிரியர்களுக்கு அவர்களின் எங்களிப்புக்கான உரிமம் உள்ளது. அவர்கள் ராயல்டி வருமானம் பெறுவதற்கு தகுதியானவர்கள். என்றாலும் இந்த உரிமைகளை ஒருங்கிணைப்பது, நிர்வகிப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு.
திரைப்பட பாடல்கள், இசைக்கான உரிமைகள் ஆடியோ நிறுவனங்களுக்கு விற்கப்படும்போது போடப்படும் ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்திற்கு எத்தனை வருடங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது என்பது முக்கியம், ஒப்பந்த காலம் முடிந்ததும் உரிமம் தயாரிப்பாளருக்கே திரும்ப வந்து விடும். என்றார்.