மூணாரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ‘பேய் நடமாட்டத்தால்தான் இப்படி நடக்கிறது’ என வெளியே பேச்சுகள் எழுகின்றன. அதற்காக, அமானுஷ்ய சக்திகளை அதன் சத்தங்களை வைத்து, கண்டுபிடித்து, அதனுடன் உரையாடும் நிபுணரான பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் ஆதி கல்லூரிக்கு வரவழைக்கப்படுகிறார். தன்னிடமுள்ள அதிநவீன கருவிகள் மூலமாக மொத்த கல்லூரியையும் அலசுகிறார் ரூபன். அப்போது, அதே கல்லூரியில் இளநிலை விரிவுரையாளராக இருக்கும் லட்சுமி மேனன் மீது ரூபனின் சந்தேகப் பார்வை திரும்புகிறது. இந்த விசாரணை பயணத்திற்கிடையில் மர்மங்களும் கொலைகளும் நடக்கிறது. இதன் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.
ஈரம் படத்தில் தண்ணீரை பேயாக காட்டிய அறிவழகன் இந்த படத்தில் ஒலியை பேயாக காட்டி மிரட்டுகிறார். ஆதி , லட்சுமி மேனன் தங்கள் பாத்திரம் உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். சிம்ரனுக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா தங்கள் கேர’டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
அமானுஷ்ய காட்சிகளுக்கிடையே , காமெடியைத் தூவிவிடுகிறார் ரெடின் கிங்ஸ்லி. அமானுஷ்யமும் திகிலும் நிறைந்த திரைக்கதைக்குத் தேவையான மிரட்டலான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்அருண் பத்மநாபன். தமன் இசை பயமுறுத்துகிறது. கலை இயக்குநர் மனோஜ் குமார் ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டுகிறார். படத்தின் கருவே ஒலி என்பதால் ஆடியோகிராபர் டி. உதய்குமார் மற்றும் சின்க் சினிமாவின் நேர்த்தியான ஒலியமைப்பு படத்திற்கு மகுடமாக மாறியிருக்கிறது.