‘சப்தம்’ படத்திற்கு பிறகு பேய்களை நம்புகிறேன்: ஆதி

‘சப்தம்’ படத்திற்கு பிறகு பேய்களை நம்புகிறேன்: ஆதி

7ஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம். இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படம் தொடர்பாக பேட்டியளித்த ஆதி கூறியதாவது: ’ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ஈரம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அடிக்கடி சில கதைகள் பேசுவோம். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் அமையவில்லை. இந்த படத்திற்கு அது சரியாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் கொஞ்சம் விரைவாக பண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. குறிப்பாக அறிவழகன் உடன் இணைந்து அடுத்தடுத்து பணியாற்ற விரும்புகிறேன்.

லட்சுமி மேனனும் நானும் இந்த படத்தில் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல.. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை.. இந்த படம் காதல் படம் அல்ல.. ஆனால் காதலும் இருக்கும்.. லட்சுமி மேனன் மட்டுமல்ல, சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்புமே இந்த படத்தில் முக்கியமானது.

இந்த படத்தில் அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள். அப்படி யாருமே இதுவரை பண்ணாத ஒரு கதாபாத்திரம் செய்யும்போது அது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். இதுகுறித்த விஷயங்களை அறிவழகன் ஆய்வு செய்து என்னிடம் விளக்கி சொன்னபோது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது.
கௌரவ் திவாரி என்கிற பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவரது மரணம் கூட இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அவரைப் பற்றி நிறைய படித்தேன். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. ஒரு இடத்தில் அவருடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் கூட பொருந்தி போனது. அவரைப் போலவே நானும் பைலட் பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.. அவர் அப்படி பைலட் பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் தான் பாராநார்மல் நடவடிக்கைகளை உணர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அது பற்றி படிக்க வேண்டும் என நினைத்து அதில் முழுமூச்சுடன் இறங்கி மும்பையில் அலுவலகம் அமைத்து நிறைய விசாரணைகளை அவர் செய்திருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்புவோம். ஈரம் படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.

தமிழ், தெலுங்கு என மொழிகள் பிரித்துப் பார்த்து படம் பண்ணுவதில்லை. ஒருவர் கதை சொல்ல வரும்போது அது எந்த மொழி என்பதை விட, அது நமக்கு பிடிக்கிறதா, ஒத்து வருமா என்று தான் பார்க்கிறேன். தெலுங்கில் அதிகம் நடிப்பது போன்று தோற்றம் இருக்கலாம். ஆனால் இந்த வருடம் தமிழில் சப்தம், மரகத நாணயம்-2 என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன. மரகத நாணயம்-2 படப்பிடிப்பு அடுத்த மாதம் அதே குழுவினருடன் துவங்க இருக்கிறது. தெலுங்கில் இப்போது பாலகிருஷ்ணா உடன் இணைந்து அகாண்டா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன்.

ஹீரோவா, வில்லனா எது அதிக விருப்பம் என்று கேட்டால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு தான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அஜித் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஹீரோவே சில படங்களில் வில்லன் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் தானே பிடிக்கிறது. ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத்தானே கொடுக்க வேண்டும்.

வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால் நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும். மிருகம் இரண்டாம் பாகத்திற்காக என்னிடம் வந்தார்கள். அவர்கள் சொன்ன கதையில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் மறுத்து விட்டேன் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்றார்கள். உங்கள் விருப்பம் என சொல்லி விட்டேன்.

ஒரு தயாரிப்பாளராக நான் இருந்தால் கமர்சியல் படம் எடுக்கத்தான் விரும்புவேன். ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய துணிச்சலான விஷயத்தை படமாக்க முன்வரும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அதை நான் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்கு ஒரு டீம் அமைவது ரொம்பவே முக்கியம். அது சிரமமும் கூட. நான் படங்களை மெதுவாக பண்ணுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

திருமணம் ஆகிவிட்டதால் மனைவியுடன் இணைந்து தான் கதை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஒரு கதை கேட்ட பின்பு நண்பர்களிடம் சொல்வது போல அவரிடம் சொல்லி அது குறித்து பேசி கொள்வேன். அவருக்கும் எனக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும் என்று தெரிவதால் என் பாயிண்ட் ஆப் வியூவில் இருந்துதான் யோசிப்பார். ஆனாலும் இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.

இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமான நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியிடம் அது பற்றி சொல்லி விடுவேன். அவரும் சினிமா துறையில் இருந்தவர் என்பதால் கதைக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்வார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்.

Leave A Reply

Your email address will not be published.