சுழல் 2: திகில் அனுபவத்துடன் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

2023ம் ஆண்டு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான ‘சுழல்’, பெண் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை ஏற்படுத்தும் முக்கிய சமூகப் பிரச்சினையை துணிந்து பேசியது. பெரிய வெற்றியையும் பெற்றது. தற்போது வெளியாகி இருக்கும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ் – சீசன் 2’, அதை இன்னும் தீவிரமாக பேசியுள்ளது.

காளிப்பட்டினம் என்கிற கற்பனையான கிராமத்தைக் களமாகக் கொண்டிருக்கிறது இந்த சீசன். முதல் சீசனில் முக்கியக் கதாபாத்திரங்களாக வந்தவர்களில் காவல் உதவி ஆய்வாளர் கதிர், நீதி கேட்டு போராடிய ஐஸ்வர்யா ராஜேஷ் இதிலும் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.

தன் தங்கையின் சாவுக்கு காரணமானவனை பழிதீர்த்ததால் சிறை தண்டனை அனுபவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது துப்பாக்கியை ஐஸ்வர்யா ராஜேஷ் பயன்படுத்த அனுமதித்ததால் சஸ்பென்டில் இருக்கிறார் கதிர். இந்த சீசனில் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர் லால் கொல்லப்படுகிறார். அவர் ஏன் கொல்லப்ட்டார், யாரால் கொல்லப்பட்டார் என்பதையும் அதனை சிறையில் இருக்கும் ஐஸ்வர்யாவும், சஸ்பெண்டில் இருக்கும் கதிரும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதும்தான் இந்த சீசனின் கதை.

முதல் சீசன் போன்றே விறுவிறுப்பான திரைக்கதையை இந்த சீசனுக்கும் எழுதி இருக்கிறார்கள் புஷ்கர் – காயத்ரி இயக்குநர் தம்பதி. இயக்குனர்கள் பிரம்மா, -கே.எம். சர்ஜுன் ஆகிய இருவரும் முதல் சீசனில் காட்டியிருந்த அதே புத்துணர்வை இந்த சீசனிலும் 8 எபிசோட்களிலும் பரவவிட்டிருக்கிறார்கள். இத்தொடரின் நாயகன் கதைதான் என்றாலும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்ஸின் பாடல்களும் இசையும் இன்னொரு நாயகனாகவே படம் முழுக்க பயணிக்கிறது. அஷ்ட காளி திருவிழா காட்சிகளுக்கு சாம்.சி.எஸ். உயிர் கொடுத்திருப்பது உலகத் தரம்.
5 மணி நேரம் ஒரு பரபரப்பான திரைப்பட உணர்வை தருகிறது. யாராலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் தொடரை உச்சத்தில் தூக்கி வைக்கிறது.

திகில் ரசிகர்கள் மட்டுமல்ல பெண் குழந்தைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் காண வேண்டிய தொடர்.

Leave A Reply

Your email address will not be published.