ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு நம்மாலும் படம் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறோம்: கிங்ஸ்டன் விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேச்சு
ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கிங்ஸ்டன்’. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
பேண்டசி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த இந்த படம் வருகிற மார்ச் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் அறிமுக விழாவும், பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. இதில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:
எனது அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார். அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். அதேபோல நான் நடிக்கிறேன் என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்தது வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். ‘தெறி’, ‘அசுரன்’ என இரண்டு படங்கள் தாணு சார் தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே வெற்றி. அதனால் அவர் எனக்கு ராசியான தயாரிப்பாளர். தற்போது ‘வாடிவாசல் ‘ படத்திலும் இணைந்திருக்கிறோம்.
இயக்குநர் சுதா கொங்காரா – அவர்களும் எனக்கு 20 ஆண்டுகால நண்பர் தான். அவர்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தபோது ..நான் ஏ ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்தேன். அவர்களுக்கு மேடை பயம் இருக்கிறது எப்போதும் மேடைக்கு வருகை தர மாட்டார். என்னுடைய அழைப்பிற்காக இங்கு வருகை தந்தார். அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா ரஞ்சித்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ‘தங்கலான்’ திரைப்படத்திற்கு இசையமைத்தேன். அது ஒரு மறக்க இயலாத அனுபவம். அவர் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக உயர்த்துகிறார். அதனால் அவருடன் இணைந்து பணியாற்றும்போதெல்லாம் எனக்கும் புதிய உற்சாகம் பிறக்கும்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொண்டேன்.
இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். ஒரு ஃபேண்டஸி. அதை நம்முடைய களத்திலிருந்து சொல்ல வேண்டும். அதாவது நம்ம ஊரு ஹாரி பாட்டர் எப்படி இருப்பார்? இதுபோன்ற எண்ணங்களை என்னிடம் கதையாக சொன்ன போது
எனக்குள் இந்த படத்தை தயாரித்து, நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது.
இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.