பல வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞன் பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
கதைப்படி பிசியோதெரபிஸ்ட் காசியை(பாலாஜி முருகதாஸ்) காணவில்லை என அவரின் வயதான பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். காசி மாயமானது குறித்து விசாரணை நடத்துகிறார் இன்ஸ்பெக்டர் சரவணன்(ஜெ. சதீஷ் குமார்). விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது.
காசி வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் கதை. பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். ஏற்கெனவே பல படங்களில் நடித்தவர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த சமூகம் பல்வேறு தளங்களில் பெண்களை எப்படி தனிமைப்படுத்துகிறது. அந்த தனிமையை தீயவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தெளிவாக பேசுகிறது படம். இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு சதீஷ்குமார் கச்சிதமாக பொருந்துகிறார். பெண்களை ஏமாற்றும் காசி கேரக்டருக்கு பாலாஜி முருகதாஸ் நியாயம் செய்கிறார். சாக்ஷி அகர்வால், சாந்தினி கவர்ச்சி காட்டுகிறார்கள், ரக்ஷிதா கவர்ச்சியின் உச்சம்.
இன்றைக்கு தேவையான ஒரு விஷயத்தை பேசிய வகையில் கவனம் பெறுகிறது. கவர்ச்சியை குறைத்து கருத்தில் கவனம் செலுத்தியிருந்தால் எல்லோரும் பார்க்கத் தகுந்த படமாகி இருக்கும்.