தேர்தலில் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி தோல்வி அடைந்த முத்தையாவை (கவுண்டமணி) எல்லோரும் ஒத்தஓட்டு முத்தையா என்றே அழைக்கிறார்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று இந்த களங்த துடைக்க வேண்டும், திருமணத்திற்கு காத்திருக்கும் தனது 3 தங்கைகளை 3 சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு பயணிக்கிறார். அது நிறைவேறியதா என்பது படத்தின் கதை.
இன்றைய அரசியல் சூழலை நய்யாண்டி செய்ய வேண்டும் என்கிற சிந்தனையுடன் இயக்குநர் ராஜகோபால் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கதை தட்டுத்தடுமாறி திக்குத் தெரியாமல் பயணித்து அந்த நோக்கத்தை சிதைக்கிறது. காமெடி, கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் என படத்தை திசைமாற்றி இருக்கிறார்.
அரசியல்வாதிகளை வைத்து வெளியாகும் அனைத்து ட்ரோல் வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. சமாதியில் தியானம் செய்வது, அடித்து சத்தியம் செய்வது, வாய்ப்பில்லை ராஜா என பேசுவது என படம் முழுக்க தற்காலிக அரசியல் நையாண்டிகள் இருக்கிறது.
80வயதை தாண்டிய நிலையிலும் கவுண்டமணி முடிந்த வரையில் நடித்திருக்கிறார். யோகிபாபு தனது நடிப்பால் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் அப்பப்போ ரசிகர்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சி படத்திற்கு பலமாக உள்ளது. கவுண்டமணியை இன்னும் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.