‘காதல் கோட்டை’ போன்று ‘2கே லவ் ஸ்டோரியும்’ வெற்றி பெறும்: பிரபுசாலமன் கணிப்பு

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2ரி லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது:
என்னுடைய நண்பர் ஜெகவீர் அவருடன் வேறு ஒரு ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு வருடம் டிராவல் செய்து உள்ளேன், அவரின் உழைப்பு, ஆர்வம் பற்றி எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைத் தரும். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இன்றைய விழாவின் நாயகன் இமான் ஒரு நல்ல இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை உங்களால் சொல்லவே முடியாது.

எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கையை, மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கிறதோ அந்தளவு நம் படங்கள், உலகத் திரைப்படங்களாக உலகிற்குத் தெரியும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிடிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான். நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களைப் போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தை இந்தத் திரைப்படம் நிறைவு செய்யும்.

எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாகத் திரைக்கதையை எடுத்துச் சென்றுள்ளீர்கள், நடித்த நடிகர்கள் அனைவரும், மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாருமே தனியாகத் தெரியவில்லை, அந்தந்த பாத்திரங்களாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற ஒரு விஷயத்தை இந்த திரைப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் சார் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகினும் கதாநாயகனும் சந்திக்காமல் ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் . என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது:
வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன் பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. என்றார்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.