அஜர்பைஜானில் வசிக்கும் அஜித்தும் , த்ரிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 12 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இனால் மற்றொரு நகரத்தில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார் திரிஷா. இதனால் கடைசிப் பயணமாக, தானே காரில் கொண்டு சென்று விடுகிறேன் என்கிறார் அஜீத். இருவரும் செல்கிறார்கள். இந்த நிலையில் இவர்களை திசை திசை திருப்பி வில்லன்கள் அர்ஜூனும், ஆரவும், வில்லி ரெஜினாவும் சேர்ந்து திரிஷாவை கடத்துகிறார்கள். அவர்கள் ஏன் திரிஷாவை கடத்தினார்கள், அஜித், திரிஷாவை மீட்டாரா என்பது படத்தின் கதை.
வழக்கமாக அஜீத் படங்களில் வரும், அறிமுக பில்டப் காட்சிகளில் இருந்து விலகித் தொடங்கும் ஆரம்ப காட்சியிலேயே, இது வழக்கமான அஜித்குமார் படம் இல்லை என்பதைப் புரிய வைத்து விடுகிறார், இயக்குநர் மகிழ் திருமேனி. காரில் மனைவியுடன் செல்லும்போது தகராறு செய்யும் ஆரவ் கோஷ்டியை பெட்ரோல் பங்கில் மீண்டும் சந்திக்கும்போது, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதிரடி ஆக்ஷனுக்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தாலும் அஜித், ‘நான் சண்டைய விரும்பலை’ என்று சொல்கிற இடம் புதிது.
அர்ஜுன் கதாபாத்திரத்தில் அஜித்குமார் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் கோஷ்டிகளிடம் சளைக்காமல் அனைத்து அடிகளையும் வாங்கிக் கொள்வது ஆச்சரியம். ஒரு மாஸ் ஹீரோ இப்படிஇறங்கி வந்து கதைக்குள் அடங்குவது, ஆரோக்கியமானது. அஜித்தின் மனைவி கயலாக வரும் த்ரிஷாவுக்கு அதிக வேலையில்லை. நெகட்டிவ் கேரக்டரில் அர்ஜுன் சார்ஜா, ஆக்ஷன் கிங் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் போடும் ஆக்ஷன் மட்டும் தனித்துத் தெரிகிறது. ரெஜினாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரவ், அஜர்பைஜான் நடிகர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
கதை நடக்கும் அஜர்பைஜானின் நீண்ட சாலைகளின் ‘லேண்ட்ஸ்கேப்’, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கிறது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கதைக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. மிகைப்படுத்தப் படாத காட்சிகள் படத்துக்குப் பலம் .
வழக்கமாக ரத்த பொறியலுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அஜீத், இந்த முறை சைவ சாப்பாடு பரிமாறியிருக்கிறார்.