தண்டல்: காதலும், ஆக்ஷனும்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் பால்ய பருவத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர். வருடத்திற்கு 9 மாதம் கடலில் இருப்பவர் நாசைதன்யா ஆனால் இந்த முறை செல்லக்கூடாது என்று அடம்பிடிக்கிறார் சாய்பல்லவி. அதையும் மீறி அவர் குஜராத் சேட் ஒருவருக்காக நாக சைதன்யாவும், அவர் ஊரைச் சேர்ந்தவர்களும் அரபிக்கடலில் மீன் பிடிக்கிறார்கள். ஒருமுறை புயல் காரணமாகப் பாகிஸ்தான் கடல் எல்லைக்குச் சென்றுவிடுகிறது நாக சைதன்யா குழுவின் படகு. பாகிஸ்தான் கடலோரக் காவல்படை அவரையும் அவருடன் மீன் பிடிக்கச் சென்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. சிறையிலிருந்து அவர்களை மீட்கப் போராடுகிறார் சாய்பல்லவி. அவர் போராட்டம் வென்றதா? இருவரும் இணைந்தார்களா என்பது படத்தின் கதை.

உண்மைக் கதையின் பின்னணியில் அழகான காதல் கதையை இணைத்து படமாக்கி இருக்கிறார், இயக்குநர் சந்து மொண்டேட்டி.
காதலியுடன் நாயகன் பொழுதைக் கழிப்பதான காட்சிகள் வலிந்து திணிக்காமல் இயல்பாகப் பின்னப்பட்டுள்ளன. போக வேண்டாம் என்று வலியுறுத்தியும் கேட்காமல் சென்று, பாகிஸ்தான் சிறையில் வாடும் நாயகன் மீது, நாயகிக்கு எழும் நியாயமான கோபமும் அதனால் அவர் எடுக்கும் முடிவும் யதார்த்தமாக இருக்கிறது.

கலங்கரை விளக்கமும், மீன்கொடியும் காதல் சாட்சிகளாக இருப்பதும் மீனவர்கள் வீட்டுக்குத் திரும்பும்வரை குடும்பத்தில் இருக்கும் பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட மீனவ கிராம விஷயங்களை யதார்த்தமாகப் பேசுகிறது படம். நாக சைதன்யா – சாய் பல்லவிக்கான காதல் கெமிஸ்ட்ரி, நிஜ காதலர்களைப் பார்ப்பது போல உணர வைக்கிறது. ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிப்பால் ஈர்க்கிறார் சாய் பல்லவி. அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் ரசிக்க வைக்கின்றன. நடனக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஒரு மீனவராகத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கும் நாக சைதன்யா, காதல், ஆக்ஷன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது நாயகனாக வரும் கருணாகரனும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், பாகிஸ்தான் சிறை அதிகாரி பிரகாஷ் பெலாவடி, நாகசைதன்யாவின் அம்மாவாக வரும் கல்பலதா என துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர்.

புயலில், கடலுக்குள் படகுகள் தத்தளிக்கும் காட்சிகளிலும் பாடல்களிலும் ஷம்தத் சைனுதீனின் ஒளிப்பதிவு ஆச்சர்யப்படுத்துகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. காதல், ஆக்ஷன் இரண்டையும் சம அளவில் கலந்து கவனம் ஈர்க்கிறது தண்டல்.

Leave A Reply

Your email address will not be published.