100 படங்களுக்கு மேல் காமெடி டிராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ட்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.
வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் கே.பாக்யராஜ் பி.வாசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கவுண்டமணி பேசியதாவது: அனைவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜனும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என் நன்றி. இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம். படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி. இயக்குநர் பி. வாசுவிற்கும் நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி. தயாரிப்பாளர் கே.ராஜன் என் நண்பர் தான். அவருக்கும் என் நன்றி. இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை நன்றாக பாருங்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட. என்றார்.