தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் மணிகண்டன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான சான்வே மேகன்னாவை இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக வீட்டை புதுப்பிக்க விரும்பும் அப்பா ஆர்.சுந்தர்ராஜன், ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் அம்மா இன்னொரு புறம் எந்நேரமும் தன்னுடைய அந்தஸ்தை வைத்து ஹீரோ குடும்பத்தை குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும் ஹீரோவின் அக்கா கணவர் குரு சோமசுந்தரம். இவற்றையெல்லாம் குடும்பஸ்தனான மணிகண்டன் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
சீரியசான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதை ஜாலியாக ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி. யூடியூபில் பிரபலமான ‘நக்கலைட்ஸ்’ குழுவினரின் முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.ஒரு சீரியசான காட்சியைக் கூட சோகத்தை திணிக்காமல் மிகவும் ஜாலியாகவும் அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வகையிலும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.
’குட் நைட்’, ‘லவ்வர்’ இப்போது ‘குடும்பஸ்தன்’ என அடுத்தடுத்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மணிகண்டன். முந்தைய படங்களை போலவே இதிலும் ஒற்றை ஆளாக ஸ்கோர் செய்து ரசிக்க வைக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். நாயகியாக புதுமுகம் சான்வே மேகன்னா முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பு. மணிகண்டனுக்குப் பிறகு படம் முழுக்க அப்ளாஸ் பெறுபவர் குரு சோமசுந்தரம் தான். குடும்பம், ஆபீஸ் என எல்லா இடங்களிலும் தனக்கென ஒரு ‘கோடு’ போட்டு வாழும் காமெடி கலந்து ஸ்ட்ரிக் ஆபீசர் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். ஆர்.சுந்தர்ராஜன், அம்மாவாக வரும் கனகம், நிவேதிதா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
படம் முழுக்க குடிகாரர்களாக வரும் ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் கூட்டணி ரகளை செய்திருக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸில் பாட்டில் மூடியை விழுங்கிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சிரிப்பு சரவெடி.
வைசாக்கின் பின்னணி இசையில் படத்துக்கு தேவையானதை வழங்கி இருக்கிறார். சுஜித்தின் ஒளிப்பதிவு நிறைவு.
நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை முழுக்க முழுக்க ரகளையான விதத்தில் சொல்கிறான் ‘குடும்பஸ்தன்’.