ஊரில் கஷ்டப்பட்ட குடும்பமாக இருந்த தன் குடும்பத்தை சென்னை வந்து சம்பாதித்து தூக்கி நிறுத்துகிறார் ஷேன் நிகம். தனது திருமணத்தை சொந்த ஊரில் பிரமாண்டமாக நடத்தி ஊரையே வியக்க வைக்க வேண்டும் என்கிற தனது திட்டத்தை செயல்படுத்த சென்னை காதலி நிஹாரிகாவுடன் வருகிறார். வந்த இடத்தில் ஒரு சின்ன கார் விபத்தை ஏற்படுத்தி விடுகிறார் நிகம். அவரது கார் மோதி அந்த ஊரின் பெரிய தலக்கட்டு குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி ஐஸ்வர்யா தத் மயக்கமாகிறார். அவர் கலையரசனின் மனைவி. அவரே பெரும் கோபக்காரர், மனைவி மீது உயிரையே வைத்திருப்பவர். இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகத் திருமண வீட்டிலிருந்து தொடங்கும் முதல்பாதிப் படம், விபத்துக்குப் பின் நடக்கும் தொடர் திருப்பங்களால் விறுவிறுப்பாக பயணிக்கிறது. நாயகனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு, அவனுடைய உறவுகள், நண்பர்களை நிம்மதி இழக்கச் செய்த கதையின் முக்கியச் சம்பவத்தில், உண்மையாகவே என்ன நடந்தது என்பதை விவரிக்கும் இரண்டாம் பாதியில் முடிச்சு அவிழும் தருணங்கள், எதிர்பாராதது.
நாயகனாக நடித்துள்ள ஷேன் நிகம், மலையாள வாசனை வீசும் தமிழ் பேசினாலும் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார். துரை சிங்கமாக வரும் கலையரசன், தனது கதாபாத்திரத்தின் சிக்கலை உணர்ந்து நடித்திருக்கிறார். மீராவாக வரும் நிஹாரிகா நடிப்பிலும் நடனத்திலும் கவர்கிறார். ஆனால் பின் பகுதியில் காணாமல் போகிறார். ஐஸ்வர்யா தத்தா இறுதிக்கட்டக் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.. கருணாஸ், கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார்கள்.
புதுக்கோட்டை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைத் தனது ஒளிப்பதிவில் அழகாகப் பதிவு செய்து கதைக் களத்தை உணர வைக்கிறார், பிரசன்னா எஸ்.குமார். பின்னணி இசை மற்றும் பாடல்களில் கவனம் ஈர்க்கிறார், சாம் சி.எஸ். நல்லதொரு ஃபீல் குட் படமாக தந்திருக்கிறார் வாலி மோகன்தாஸ்.
.