ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தியின் பதவி காலம் ஓரு ஆண்டு இருக்கும் நிலையில் நல்லாட்சி தர விரும்புகிறார். ஆனால் அவரை கொன்று விட்டு முதல்வராகிறார் அவரது மகன் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தனது வாரிசு ஐஏஎஸ் அதிகாரியன் ராம் சரண் என்றும் அவர்தான் முதல்வராக வேண்டும் என்று வீடியோ பேசி வெளியிட்டு விடுகிறார். இதனால் ராம் சரண் முதல்வராகிறார். ஆனால் அதனை முறியடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இந்த ஆடுபுலி ஆட்டத்தின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை. ஆட்டத்தின் முடிவு என்ன? ராம் சரண் யார் என்பது சஸ்பென்ஸ்.
தமிழில் ‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ என அரசியல் படங்களை இயக்கியிருந்த ஷங்கர், தெலுங்குக்காக உருவாக்கி இருக்கும் அரசியல் படம் இது. துரோகம், வஞ்சகம், அரசியல் சதுரங்கப் போட்டியைச் சுற்றிதான் திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது.
நாயகன் ராம் சரண் தன் கதாபாத்திரத்துக்கு அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார். ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி, தேர்தல் அதிகாரி, தப்பைப் பொறுக்க முடியாத மாணவன் என விதவிதமான கெட்டப்புகளில் வருகிறார். கிராமத்துத் தலைவராக வரும் இடத்தில் நிதானமான நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி கொடுத்த கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா தன் பாணியில் முத்திரையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜெயராம் அவ்வப்போது வந்து சிரிப்பு மூட்டுகிறார். சுனிலும் தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.
அஞ்சலி இரு மாறுபட்ட வேடங்களில் வருகிறார். சமுத்திரககனி, பிரம்மானந்தம், அச்யுத்குமார் உள்பட ஏராளமான நடிகர் பட்டாளம் இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையை குறையில்லாமல் செய்திருக்கிறார் . திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
ராம் சரண், எஸ்.ஜே.சூர்யாவின் ஆடுபுலி ஆட்டமும், அரசியல் விளையாட்டும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது. பிரமாண்ட பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் ஷங்கர் பிராண்ட் டிரீட்மெண்ட்.
சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு அக்மார்க் ஷங்கர் படம்.