சுனாமியில் பெற்றோரை இழந்த ரிதாவை அதே சுனாமியில் தனது பெற்றோரை இழந்த அருண் விஜய் தங்கையாக பேணி பாதுகாத்து வளர்க்கிறார். அருண் விஜய் செவித்திறன் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளி. கிடைக்கிற வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அருண் விஜய் தனது தங்கைக்காகவே வாழ்கிறார். இதற்கிடையிலலர் தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார். இதனால் தங்கை உள்பட அவரை சுற்றி உள்ளவர்கள் பாதிப்படைகிறார்கள். ஒரு நிரந்தரமான வேலை இருந்தால், அருண் விஜய் சரி ஆகிவிடுவார் என்று நம்பும் அவரது நலம் விரும்பிகள், ஆதரவற்ற இல்லம் ஒன்றில் காவலராக வேலைக்கு சேர்த்து விடுகின்றனர்.
அருண் விஜய் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே அந்த இல்லத்தில், வெளியே சொல்ல முடியாத சம்பவம் கொடிய சம்பவம் ஒன்று நடக்கிறது. அந்த சம்பத்திற்கு பழி தீர்க்க கிளம்புகிறார் அருண் விஜய். அந்த சம்பவம் என்ன? எப்படி பழிதீர்க்கிறார்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இந்த காலகட்டத்திற்கு தேவையான கதை கருவை எடுத்துக் கொண்ட பாலா, அதனை தனது முந்தைய படங்களின் சாயலில் தந்திருக்கிறார், என்றாலும் தாரை தப்பட்டையில் தொலைத்த பாலா மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி.
நீதிமன்றம், காவல் நிலையத்தின் இயல்பான காட்சிகள். போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுத்துவது, வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதியாக வரும் மிஷ்கின் ‘லார்ட்ஷிப்’ என கூப்பிட வேண்டாம், சட்டத்தில் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை, ஐயா சாருனு கூப்பிடுங்க’ என்ற வசனங்கள் வரும் இடம். ‘எல்லாருமா சேர்ந்து ஒரு நல்லவனை சிலுவையில் அறைந்துவிடாதீர்கள்க’ அருண் விஜய் பற்றி சமுத்திரகனி சொல்வது, ‘எங்களுக்கு கண்ணுதான் இல்லை… ஆனால் கண்ணீர் வரும்’, ‘எல்லாம் நல்லா இருக்கிற உங்களால மாற்றுத் திறனாளிகளான எங்களோட வலியை எப்படி உணர முடியும்?’ என்பது போன்ற வசனங்களும், காட்சிகளும் பாலா டச்.
படத்தை ஒற்றை ஆளாக தூக்கி சுமக்கிறார் அருண் விஜய். கிளைமாக்சில் சைகை பாஷையில் தனது துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி மனதை நெகிழச் செய்கிறது. நீதிபதி குபேரனாக வரும் இயக்குநர் மிஷ்கின் கவனம் ஈர்க்கிறார். சமுத்திரகனி நிறைவாக செய்திருக்கிறார். தங்கையாக வரும் ரிதா சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி ரோஷினி கதாப்பாத்திரம் ‘பிதா மகன்’ லைலாவை நினைவுபடுத்துகிறது. பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்திருக்கிறார்., படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், கதையோடு இணைந்து பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா குமரிக்கடலில் உயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும், படகு போக்குவரத்தையும் காட்சிப்படுத்தியிருகும் விதத்தில் வானம் தொடுகிறது. சேது, பிதாமகன், நந்தா பட வரிசையில் பிதாமகனுக்கும் இடம் உண்டு.