ஜவுளி கடையின் ட்ரெயல் ரூமில் பெண்களை உடை மாற்றுவதை வீடியோ எடுத்து மிரட்டுபவரை, தேடிச் சென்று கொல்கிறார் ஒரு மர்ம நபர். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி பத்திரிகையாளரான திரிஷா. இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் வினய், திரிஷா சொல்லச் சொல்லக் குற்றவாளியின் முகத்தை வரையும் ஓவிய கலைஞன் டொவினோ தாமஸ். திரிஷா கொலை குற்றவாளியின் முக அடையாளத்தை சொல்லச் சொல்ல டொவினோ தாமஸ் வரைகிறார். அது அவரது முகமாகவே இருக்கிறது. உண்மையில் இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதோடு, இக்கொலைக்கும் இம்மூவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை சொல்கிறது படம்.
ஆக்ஷனிலும், ஸ்டைலிஷ் லுக்கிலும் அட்டகாசம் செய்திருக்கிறார் டொவினோ தாமஸ். குழப்பமும், பதற்றமும் கலந்த பரிதவிப்போடு வரும் அலிஷா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் த்ரிஷா. முதல் பாதியில் வினய்யின் நடிப்பும், உடல்மொழியும் கவனிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் வழக்கமான வில்லன் ஆகிறார். ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் கதைக்குத் தேவையானதை கொடுத்திருக்கிறார்கள்.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்கான இறுக்கத்தையும், பரபர ஸ்டைலிஷ் ஆக்ஷனுக்கான பளபளப்பையும் வழங்கியிருக்கிறது. அடுக்கடுக்கான கிளைக்கதைகளை முடிந்தளவு சிக்கலின்றி, பரபரப்பு குன்றாமல் கோர்க்கப் போராடியிருக்கிறது சமன் சாக்கோவின் படத்தொகுப்பு. படம் முழுவதும் நிறைந்திருக்கும் உணர்ச்சிகளுக்கு ஆழத்தைக் கூட்டியிருக்கிறது ஜேக்ஸ் பிஜோய்யின் பின்னணி இசை. அதிலும் விறுவிறுப்பான காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் ஜேக்ஸ்ஸின் கை ஓங்கியிருக்கிறது.
ஃபேஸ் ப்ளைண்ட்னஸால் பாதிக்கப்பட்ட பெண், அதீத திறமையுள்ள நாயகன், மர்மம் நிறைந்த போலீஸ், கண்டுபிடிக்கப்படாத குற்றவாளி என முதற்பாதியின் களமும், அதற்கான கதாபாத்திரங்களும் சுவாரஸ்யம் தருகின்றன. இரண்டாம் பாகம் ஆக்ஷனில் மிரட்டுகிறது. பறக்கும் விமானத்தில் நடக்கும் தேடுதல் வேட்டையும், சண்டைக்காட்சியும் நேர்த்தியாக எடுக்கப்பட்டு, சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் தருகிறது.
படத்தில் ஆங்காங்கே லாஜிக் மிஸ்சாகி இருந்தாலும் விறுவிறுப்புக்கு கியாரண்டியான படம்.