ஆகாஷ் முரளிக்கு நல்ல மாமனார் கிடைத்துள்ளார்: சிவகார்த்திகேயன்

எக்ஸ்.பி.பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் நேசிப்பாயா. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் இது. அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பொங்கல் அன்று வெளியாகி உள்ளது. இணைத் தயாரிப்பாளர் ஆகாஷ் முரளியின் மனைவி சிநேகா பிரிட்டோ .
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ பேசும்போது “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்பு மேம், அதிதி என படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆகாஷின் அறிமுகப் படம் இது. நிச்சயம் அனைவரும் வாழ்த்துவீர்கள் என நம்புகிறேன். படத்தில் யுவனின் இசை இன்னொரு ஹீரோ. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி” என்றார்.

நாயகி அதிதி ஷங்கர் பேசியதாவது: இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இயக்குநர் விஷ்ணு வர்தன் சாருக்காகதான் கதை கூட கேட்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். விஷ்ணு சாரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். ’விருமன்’ படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் போது ஒருநாளுக்கு முன்பாக எனக்கு காட்சிகளை பிடிஎஃப்பில் அனுப்புவார்கள். விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு சார். நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் சார் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். என்றார்.

ஆகாஷ் முரளி பேசியதாவது: படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அங்கிள் மற்றும் சிநேகா பிரிட்டோவிற்கு நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்த என் குரு விஷ்ணுவர்தன் சாருக்கு நன்றி. அற்புதமான அனுபவமாக இந்த படம் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான பாடல்கள் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. அதிதி, சரத் சார், கல்கி எல்லோருக்கும் நன்றி. அண்ணா, அம்மா, அக்கா எல்லோருக்கும் நன்றி. என் தாத்தாவும் அப்பாவும் என்னையும் என் அண்ணனையும் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள் . என்றார்.

சிவகார்த்திகேயன் பேசியதாவது: இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் சார் தான். பிரிட்டோ சார் மிக நல்ல மனிதர். நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்.

என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். தொலைக்காட்சியில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.