கேரளாவில் உள்ள குமுளியில் லாட்டரி கடை நடத்தி வருகிறார் மாணிக்கம் (சமுத்திரக்கனி), தன் மனைவி (அனன்யா), இரண்டு மகள்கள், மனைவியின் தம்பி, மாமியார் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது குழந்தைக்குப் பேச்சுத்திறன் சவால் இருப்பதால் அவருக்கான மருத்துவச் செலவு, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான செலவு, மனைவியின் தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான செலவு எனப் பல பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்.
இந்நிலையில், இதுபோன்று வேறு பொருளாதார சிக்கலில் இருக்கும் முதியவர் (பாரதிராஜா), சமுத்திரகனி கடையில் லாட்டரி சீட்டு வாங்குகிறார். ஆனால், கையிலிருந்த பணம் தொலைந்துவிட்டதால், நாளை பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை லாட்டரியைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் சொல்லிவிட்டுச் செல்கிறார். அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது.
மாணிக்கம் நினைத்தால் அந்த பரிசை அவரே வைத்துக் கொள்ளலாம். ஒரு வகையில் அது நியாயமும்கூட. காரணம் லாட்டரி சீட்டுக்கு முதியவர் பணம் கொடுக்கவில்லை. ஆனால் நேர்மையான சமுத்திரகனி அந்த லாட்டரி சீட்டை முதியவரிடம் கொடுக்க அவரைத் தேடிச் செல்கிறார், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
ஒரு கல்லூரியின் கதை, மாற்றியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை தந்த நந்தா பெரியசாமி இந்த படத்தையும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். நேர்மை, தெளிவு, பக்குவம், பொறுப்பு, அன்பு என மாணிக்கம் கதாபாத்திரத்தைத் தன் அனுபவ நடிப்பால் கண் முன் கொண்டு வருகிறார் சமுத்திரகனி. அமைதியான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்தாலும், தேவையான இடங்களில் தேவையான அவதாரங்களையும் எடுத்து, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் அனன்யா.
முதுமையின் நடுக்கம், வெகுளித்தனம், வைராக்கியம் போன்றவற்றை தன் உடல்மொழியால் கொண்டுவந்து, அனுதாபத்தைப் பெறுகிறார் பாரதிராஜா. மகள்களாக நடித்த இரு சிறுமிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நாசர். இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஶ்ரீமன், கருணாகரன், வடிவுக்கரசி, தம்பி ராமையா போன்றவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இடுக்கியின் குளுமையோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்டி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். விஷால் சந்திரசேகரின் இசையில் படம் ஒரு அடி உயர்ந்து நிற்கிறது. சாமானியர்களின் எளிய கதையை எடுத்துக்கொண்டு, குடும்ப உறவுகளால் உணர்வுகளையும், பரபர காட்சிகளால் விறுவிறுப்பையும் சேர்த்து ஃபீல் குட் படமாக நந்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.