கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள மலை கிராமத்தில் தன் தாய், தங்கையுடன் வசிக்கிறார் தர்மன் (குணாநிதி). டிப்ளமோ படித்துள்ள அவர் கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். வேலையும் தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்து விட்டாய் புதைக்க கொடுக்கப்பட்ட ஒரு நாய் உயிரோடு இருக்க அதனை எடுத்து காளி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். குடும்ப கஷ்டத்தை போக்க கேரளாவிற்கு ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு செல்கிறார், உடன் நண்பர்களும், அந்த நாயும் செல்கிறது.
ரப்பர் தோட்ட உரிமையாளரான செம்பன் வினோத்துக்கு தன் மகள் மீது அளவு கடந்த பாசம். அவருக்காக எதையும் செய்யும் அடாவடி அப்பாவாக அச்சமூட்டுகிறார். அவர் மகளை நாய் கடித்து விடவே அந்த பகுதியில் உள்ள எல்லா நாய்களையயும் கொல்லச் சொல்கிறார். இதனால் தர்மனின் நாயும் கொல்வதற்காக கொண்டு செல்லப்படுகிறது. அதை காப்பாற்றும் போராட்டத்தில செம்மன் வினோத்தின் தம்பி அம்பானி சரத்தின் கை துண்டாகிறது. இதனால் பகை பெரிதாகிறது. நாயுடன் தப்பித்து ஓடி வருகிறார்கள், செம்பன் ஆட்கள் துரத்துகிறார்கள் இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
வழக்கமானதொரு கதையில், கேரளா – தமிழ்நாடு பார்டர்களில் கழிவினைக் கொட்டும் பிரச்னை, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்த அரசியல் கேள்விகள், சாதியப் பாகுபாடு, அனைத்து உயிர்களையும் ஒன்றென மதிக்கும் மனிதம் எனப் பல விஷயங்களைப் பேச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். மலைவாழ் மக்களின் வாழ்வியல், ஆன்மிகச் சடங்குகள், கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியின் அழகியல் என படத்தை அலங்கரித்திருக்கிறார்.
அறிமுக நாயகன் குணாநிதி தனது கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகள், கோபம், ஆவேசம் போன்வற்றை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் தாயாராக வரும் மலையாள நடிகை ஸ்ரீரேகா வழக்கமான அம்மாவாக இல்லாமல் அதிரடியானவராக, நியாயத்தின் பக்கம் நிற்பவராக அசத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார்.
அதிரடி வில்லனாக அறிமுகப்படுத்தப்படும் செம்பன் வினோத்திற்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அவரின் தம்பி பிலிப்பாக பிரதான வில்லனாக அப்பனி சரத் தன் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். காளி வெங்கட் தன் வழக்கமான நடிப்பால் நெகிழச் செய்கிறார். கொற்றவை, ரெஜின் ரோஸ், நாயகனின் நண்பர்களில் ஒருவராக வரும் அஜய் என அனைவருமே தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு ஆனைக்கட்டி வனங்களின் அடர்த்தியையும் இரவு நேர அமானுஷ்யத்தையும் காட்டுகிறது. வித்தியாசமான கதை, உயிரை நேசிக்க சொல்லும் மெசேஜ் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது படம்.
தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் சங்கமித்ரா அன்புமணி முதல் படத்திலேயே அழுத்தமாக கால் பதித்திருக்கிறார்.