அதிரடியான போலீஸ் அதிகாரி மேக்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அர்ஜூன் (கிச்சா சுதீப்), தனது அடிதடி நடவடிக்கைககளால் அடிக்கடி நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார். அப்படி ஒரு முறை சஸ்பென்ட் காலம் முடிந்து ஒரு புதிய ஸ்டேஷன்கு பொறுப்பேற்க வருகிறார். வரும் வழியில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபடும் இரண்டு பேரை, அடித்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் அமைச்சரின் மகன்கள் என்று தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகிறார்கள். இந்நிலையில் லாக்கப்பில் இருந்தவர்கள் திடீரென்று இறந்து கிடக்கிறார்கள்.
அவர்களின் செல்போனில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால் அமைச்சரின் ஆட்கள் அந்த இருவரையும் மீட்க வருகிறார்கள். அவர்களைக் கொன்றது யார்? மறுநாள் பொறுப்பேற்க வேண்டிய போலீஸ் அதிகாரி அர்ஜுன், அமைச்சரிடம் இருந்தும் அவரின் ஆட்களிடம் இருந்தும் தன்னையும் மற்ற போலீஸாரையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.
ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படத்தில் இருக்க வேண்டிய எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கிறது. பரபரப்புக்கோ, விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லாமல் பறக்கிறது படம். இயக்குநர் விஜய் கார்த்திகேயா கச்சிதமாக திரைக்கதை அமைத்து ஒரு விநாடியை கூட வீணடிக்காமல் படத்தை ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்கிறார்.
மொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி பிடிக்கிறார், கிச்சா சுதீப். அவரது ஸ்டைல், ஆர்ப்பாட்டம், பன்ஞ் டயலாக் எல்லாமே தியேட்டரில் அனல் பறக்கிறது. படத்தில் அவருக்கு காதல் இல்லை, டூயட் இல்லை ஒன்லி ஆக்ஷன்தான். வரலட்சுமிக்கும் சுதீப்புக்குமான மோதல் பார்வையாளர்களைக் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது. ஆடுகளம் நரேன், சுனில், சரத் லோகித் சவா, சம்யுக்தா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இரவில் நடக்கும் கதை என்பதால் வித்தியாசமான கலர்டோனிலும் ‘லைட்டிங் அமைப்பிலும் ரசிக்க வைக்கிறது, சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு. படத்தின் வேகத்துக்கு நம்மை இழுத்துச் செல்கிறது அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை.
அவ்வப்போது லோகேஷ் கனகராஜின் ‘கைதி’யை நினைவுபடுத்துவது, வரட்சுமியின் கேரக்டர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது போன்ற குறைகள் இருந்தாலும் மேக்ஸ்… மாஸ்தான்.