ராஜாகிளி: நவீன ரத்தக்கண்ணீர்

ராஜாகிளி: நவீன ரத்தக்கண்ணீர்

தம்பி ராமய்யா நடிக்க அவரது மகன் உமாபதி இயக்கி உள்ள படம். தம்பி ராமய்யா நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார், உமாபதி கமர்ஷியல் இயக்குனராக தடம் பதித்திருக்கிறார்.

பிரபல ஓட்டல் அதிபர் பல திருமணங்கள் செய்ததும், ஒரு கொலை வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து, மறைந்ததும் நமக்கு தெரிந்த செய்திதான். இதனை ஒன் லைனாக வைத்துக் கொண்டு இன்னொரு கற்பனை கதை சொல்லியிருக்கிறார் உமாபதி.
முருக பக்தரான முருகப்பா(தம்பி ராமய்யா) சாதாரண கார் துடைக்கும் சிறுவனாக இருந்து, மிகப்பெரிய தொழில் சாம்ராஜய்த்தின் தலைவராகிறார். எல்லாமே அவரது உழைப்பு, புத்திசாலித்தனம்.

எதனாலும் வீழ்த்த முடியாத அவரை பெண்கள் வீழ்த்திவிடுகிறார்கள். காரணம் அவரது மனைவி. கணவனின் அதீத வளர்ச்சி அவரை பெண்கள் பக்கம் சாய்த்து விடுமோ என்கிற பயத்திலேயே அவரை அணுகுகிறார். அவர் மீது அன்பு செலுத்த மறுக்கிறார். ஆனால் எல்லாமும் மனைவி என்று வாழும் முருகப்பா ஒரு கட்டத்தில் பெண்களின் காதலில் விழுகிறார். அவரின் இந்த சபலம் அவரை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.

ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து தவறான நடத்தைகளால் வாழும் காலத்திலேயே கொடும் தண்டனை அனுபவித்த மனிதர்களை பற்றிய படங்களுக்கு முன்னெத்தி ஏர் ‘ரத்தக் கண்ணீர்’. அதன் நவீன வடிவமாக வந்திருக்கிறது இந்தப் படம். தொழிலதிபர் முருகப்பாவாக ஸ்டைல் காட்டுவதும், நேர்மைக்கு பங்கம் வரும் இடங்களை அநாயசமாக கடப்பதுமாய் ஆரம்பத்தில் அமளிதுமளி பண்ணும் தம்பி ராமய்யா, பெண் சபலத்துக்கு ஆளானதும் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பதும், பின்னர் துன்பத்தில் கிடந்து உழல்வதுமாய் மூன்று விதமான பரிமாணங்களை தனது ஸ்டைலில் திரைப்படுத்தி இருக்கிறார். அதோடு தனி ஆளாகவும் படத்தை தூக்கி சுமந்திருக்கிறார். அவரது கதையை ரசிகர்களுக்கு சொல்லும் சமுத்திரகனியும் தனது முத்திரை நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை சமூகம் பார்ப்பது வேறு, நிஜம் வேறு என்பதை தன் முதல் படத்திலேயே ஆணித்தரமாக சித்தரித்துள்ளார் உமாபதி. கருத்துடன் கூடிய கமர்ஷியல் படங்களைத் தரும் தகுதி அவருக்கு இருப்பதை முதல் படத்திலேயே உணர்த்தியிருக்கிறார். கேதர்நாத், கோபிநாத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு கலர்புல் விருந்து, சாய் தினேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

கவர்ச்சி காட்சிகளையும், டபுள் மீனிங் வசனங்களையும் குறைத்திருந்தால் கூடுதல் தரமான படமாக அமைந்திருக்கும். என்றாலும் ‘ராஜாகிளி’ படமல்ல… சிரிக்க சிரிக்கச் சொல்லும் பாடம்.

Leave A Reply

Your email address will not be published.