தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான உபேந்திரா நடித்து இயக்கி உள்ள படம். புராணம், சயின்ஸ் பிக்சன், பேண்டசி கலந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். பூமித்தாய் இரண்டு குழந்தைகளை பெற்றெடுகிறாள். ஒன்று உலகத்தை அழிக்க வரும் கல்கி பகவான், இன்னொரு உலகத்தை காக்க வரும் சத்யா, சில நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இவர்கள் இருவரும் அவரவர் நோக்கங்களுக்காக போராடுகிறார்கள் இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
யுனிவர்சல் இண்டலிஜன்ஸ் என்பதன் சுருக்கமே ஹிமி. இன்றைய அரசியலை நையாண்டி செய்து, அதில் ஃபேண்டஸியை கலந்து, மதம் மற்றும் சாதியை வைத்து மக்களை பிரிக்கும் சில சக்திகள் குறித்து பேசியிருக்கும் இயக்குனர் உபேந்திரா, இயற்கை வளங்களைச் சுரண்டுவதால் எதிர்காலத்தில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை, 2040ல் கட்டமைக்கப்பட்ட தனது கற்பனை உலகின் மூலம் ரசிகர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.
கல்கி பகவான், சத்யா ஆகிய இரட்டை வேடங்களில் தனது ஸ்டைலில் நடித்திருக்கும் உபேந்திரா, கல்கி பகவான் கேரக்டரில் ஏகப்பட்ட பன்ச் டயலாக்குகள் பேசி மிரட்டலாக நடித்துள்ளார். அவரை ஒருதலையாய்க் காதலிக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சியில் அழகாக இருக்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு.
எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சென்று காட்டியிருக்கிறது. கற்பனை உலகை விஎஃப்எக்ஸ் மூலம் மிரட்டலாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர். பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் கேட்கக்கூடிய ரகம்.. உபேந்திராவின் முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
படத்தின் டைட்டில் கார்டில் ‘நீங்கள் அறிவாளியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறலாம். முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பார்க்கலாம்’ என்று டைட்டில் கார்டு போடுகிறார் உபேந்திரா. அப்படியென்றால் இந்த விமர்சனத்தை விட்டு விட்டு பார்க்கலாமா? வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.