மழையில் நனைகிறேன்: உருக வைக்கும் காதல்

அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ரெபா மோனிகா ஜானை துரத்தி துரத்தி ஒருதலையாய் காதலிக்கிறார் கோடீஸ்வர வீட்டு பிள்ளை அன்சல் பால். காதலிப்பது என் உரிமை, அதை ஏற்பதும், மறுப்பதும் உங்கள் முடிவு என்று தொடர்ந்து காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதல் கசிந்துருகி வரும் நிலையில் விபத்து ஒன்றில் இருவருமே சிக்குகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

ஃபீல்குட் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இதை டி.சுரேஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். கிறிஸ்தவக் குடும்ப தம்பதியாக வரும் மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ஒரே மகன் அன்சல் பால் மீது காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது. கோடீஸ்வரனாக இருந்தாலும், ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் அன்சன் பால், ரெபா ஜானின் காதலுக்காக உருகி தன்னை மாற்றிக்கொள்கிறார். அவரும், ரெபா ஜானும் பொருத்தமான ஜோடி. ரெபா மோனிகா ஜான் தன் நடிப்பால் படத்தை தாங்குகிறார். அவரது தந்தையாக ‘சங்கர் குரு’ ராஜா, வழக்கமான பாசத்தை வெளிப்படுத்துகிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் ஜே.கல்யாணின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

2000மாவது ஆண்டுகளில் வெளிவந்த காதல் படங்களின் பாணியில் இந்த படம் உருவாகி உள்ளது. எதிர்பாராத கடைசி நேர கிளைமாக்ஸ் கண்ணீரை வரவழைத்தாலும் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கிறது. படத்தை நீளத்தை குறைத்து சொல்ல வேண்டியது நறுக்கென்று சொல்லியிருந்தால் கவனிக்கத் தக்க படமாகி இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.