விடுதலை-2 படத்தில் நடித்தது என் பாக்கியம்: மஞ்சு வாரியர்

அசுரன் படத்திற்கு பிறகு வெற்றி மாறனின் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். இந்த படத்தில் அவர் வாத்தியார் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

அசுரனுக்குப் பிறகு இந்தப் படம் பற்றி போனில் வெற்றிமாறன் சொல்லி முடிக்கும் முன்பே முந்திக்கொண்டு ‘எஸ்…’ சொல்லிவிட்டேன். வெற்றி சார் எந்தப் படம் எடுத்தாலும் அதன் தீவிரத்தில் அது முக்கியமான படமாக மாறி விடுகிறது. படத்தில் சொல்ல வருகிற விஷயம், அதன் அரசியல் எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். சொல்லப்போனால் வாத்தியாரான விஜய் சேதுபதியின் கதை, அவரது வாழ்க்கை எப்படித் தொடங்கியது, அவர் எப்படி வாத்தியாராக மாறினார், அவர் புரிந்துகொண்டது என்ன என்ற நீங்கள் பார்த்த முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். மக்களோடு மக்களாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கும் தலைவரின் கதைதான். இது மாதிரி வெளியே தெரிய வராமல் இருக்கிற தலைவர்களின் தெளிவான கதையை வெற்றி சொல்லியிருக்கிறார். நாம் யோசிக்காத பல விஷயங்களை யோசிக்க வைத்திருக்கிறார். பல விஷயங்கள் நம் இருப்பைக் கேள்வி கேட்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது எனது முக்கியமான அனுபவங்களில் ஒன்றாகிறது.

விஜய்சேதுபதி’கு கேரளாவில் கணிசமான ரசிகர்கள் உண்டு. அவருடன் சேர்ந்து நடிக்க இரண்டு மூன்று தடவை வாய்ப்புகள் வந்தன. அவை கைகூடவில்லை. எனக்கு ரொம்ப வருஷமாக அவர்கூட நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஒரு விழாவில் அவரோடு சேர்ந்து கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அப்போதுகூட இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்தோம். அது இப்போதுதான் நடந்திருக்கிறது. சிறந்த நடிகர் என்று சொல்லப்படுவதன் அர்த்தம், நேரில் அவர் நடித்துப் பார்க்கும்போது இன்னும் புரிந்தது. இவ்வளவு யதார்த்தமான நடிப்பு ரொம்பவும் அழகு.

அதே மாதிரி வெற்றிமாறன் சார் வாத்தியார் மாதிரியான கதாபாத்திரங்களை எழுதிக் கொண்டு வருவதெல்லாம் ரொம்ப கஷ்டமான காரியம். சொல்லவும், கேட்கவும் யோசிக்கவும் இந்தப் படத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவு அடர்த்தியான படங்கள் எடுக்கிற வெற்றி சார் ரொம்ப இயல்பாக சிரித்தபடி பழகுவார். ஒரு வாத்தியார் கதையை வைத்துக்கொண்டு நம் எல்லோருக்குமான விடுதலையைக் கொண்டு வந்து விடுகிறார் வெற்றி சார். அவர் படத்தில் இரண்டாவது தடவையும் நடித்தது என் பாக்கியம். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.