பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த தனது ரெஸ்டாரெண்டை கடன் பிரச்சனை காரணமாக லீசுக்கு விட்டுவிட்டு அங்கேயே வேலை செய்து வருகிறார் கதையின் நாயகன் ரங்கா. இயக்குனரும் அவரே. ரெஸ்ட்டாரெண்டை லீசுக்கு எடுத்த வில்லன் அதனை சூதாட்ட மையமாக பயன்படுத்தி வருகிறான். அவனிடமிருந்து ரெஸ்ட்டாரெண்டை மீட்க ரங்கா எடுக்கும் முயற்சிகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் படம்.
படத்தை தயாரித்து, இயக்கி கதை நாயகனாகவும் நடித்திருக்கிற ரங்கா மிலிட்டரியில் சேர்வதற்கானபயிற்சியில் ஈடுபடும்போது உடம்பை கடுமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரெஸ்டாரெண்டை தன் வசப்படுத்தும் முயற்சியில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்கும்போது நடிப்பில் தடுமாறுகிறார். ஹீரோயின் ரியா வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்களைப் போல் இல்லமல் அழுத்தமாக நடித்திருக்கிறார்.
வில்லன் நிதின் மேத்தா நடிப்பு கச்சிதம். ஹீரோவுக்கு மாமாவாக வருகிற இளங்கோ குமணன் ஆரம்பக் காட்சிகளில் ஒரு விதமாகவும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் வேறொரு பரிமாணத்திலும் பயணித்திருக்கிறார், வில்லனாக கவனிக்க வைக்கிறார், வத்சன். ஆறுபாலா, சுமா உள்ளிட்டோரும் கதையோட்டத்தில் பொருந்தியிருக்கிறார்கள்.
ஜென் மார்ட்டின் பின்னணி இசையில் காட்சிகளுக்கு விறுவிறுப்பு கூட்ட, ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. ஒரு இயக்குனராக ரங்கா கவனிக்க வைக்கிறார். முதல் 15 நிமிட படம் வேற லெவல். ஆனால் சொல்ல வந்த கதையை ஒரு இயக்குனராக நேர்த்தியாக சொல்லியிருக்கலாம்.
என்றாலும் ஒரு முறை பார்க்கத் தகுந்த கிரைம் த்ரில்லராக அமைந்திருக்கிறது படம்.