1954 ம் ஆண்டு பாடல்கள், நடனம், இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘அந்த நாள்’. பெரிய வெற்றி பெற்ற திகில் படம். இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. தற்போது அதே பெயரில், அதே பாணியில் அதே ஏவிஎம் குடும்பத்து வாரிசு ஆர்யன்ஷியாம் உருவாக்கி, நடித்துள்ள படம் இது. சின்ன வித்தியாசம் இது ஹாரர் படம்.
பிரபல சினிமா இயக்குனர் ஆர்யன்ஷியாம் புதிய படம் ஒன்றின் டிஸ்கஷனுக்காக தனது பெண் மற்றும் ஆண் உதவியார்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியான பங்களாவிற்கு செல்கிறார். அங்கு இரவு நேரத்தில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அங்கு முன்பு தங்கியிருந்தவர்கள் விட்டுச் சென்ற கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் பயங்கரமாக இருக்கிறது.
இந்த பங்களாவில் தங்கியிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணரும் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா என்பது படத்தின் கதை. இயக்குனர் ஆர்யன்ஷியாம் குழுவில் உள்ள ஒருவரே இவை அனைத்திற்கும் காரணம் என்பது படத்தின் டுவிஸ்ட். அவர் யார், எதனால் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
நரபலியை பின்னணியா கொண்டு படத்தை திகிலூட்டும் திரைக்கதையில் தந்திருக்கிறார் இயக்குனர் விவேக் கதிரேசன். ரோபர்ட் சற்குணத்தின் பின்னணி இசையும், ஆர்ட் இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகி உள்ள நரபலி மண்டமும் அதற்கு கைகொடுத்திருக்கிறது.
ஆர்யன்ஷியாம் இயக்குனராக மெண்மையாகவும், அதன் பிறகு அதற்கு நேர் எதிர்மறையான கேரக்டரிலும் தனது நடிப்பில் முத்திரை பதிக்கிறார். இமான் அண்ணாச்சி குடிகார சமையல்காரராக நடித்து அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார். லிமாபாபு, ராஜ்குமார், கிஷோர், ஆகியோரும் நடிப்பில் குறைவைக்கவில்லை.
பிற்பகுதியில் திகிலூட்டி பயமுறுத்துகிற இயக்குனர் திரைக்கதையை மெருகேற்றி முற்பகுதியிலும் கவனம் செலுத்தி இருந்தால் ‘அந்த நாள்’ எல்லா நாளும் பார்க்கப்படுகிற படமாக அமைந்திருக்கும்.