தன் வீட்டு மரத்து மாங்காயை பறித்த சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். இந்த உண்மையான சம்பவத்தை தொடர்ந்து அதில் கற்பனை கலந்து அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதை நல்லதொரு ஹெபர் லிங் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரசாத் முருகன்.
மகளாகப் பாலின மாற்றம் அடையும் மகனை டாக்டராக்க விரும்பும் துப்புரவு தொழிலாளி அபிராமி, கூலிக்கு கொலை செய்யும் அயிட்டங்காரன் பரத், ஜாதிக் கட்சி பிரமுகர் தலைவாசல் விஜய், குடும்ப பாலியல் வன்முறைக்குள் சிக்கும் அஞ்சலி நாயர் ஆகியோரின் கையில் அந்த துப்பாக்கி கிடைத்து அதனால் அவர்கள் அடையும் மாற்றம்தான் படத்தின் கதை. ஆர்வத்தை தூண்டும் இந்த கதைகள் இரண்டாம் பாதியின் முடிவில் ஒரே நேர்கோட்டில் இணைந்து ஆச்சர்யப்படுத்துகிறது.
பரத், அபிராமி, அஞ்சலி நாயர், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, ஷான், தலைவாசல் விஜய், அருள் ஷங்கர் என கச்சிதமாகப் பொருந்திப் போகும் கதாபாத்திர தேர்வுகள் படத்திற்கு பலமாகியுள்ளது. ஜோஸ் ஃபிராங்க்ளினின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது, ‘போ போ சே குவாரா‘, ‘தேசம் இல்லா ராஜா நான்’ ஆகிய பாடல்களோடு வசனமும் எழுதியுள்ள ஜெகன் கவிராஜ் திருப்பமான ஒரு கேரக்டரில் நடித்து நடிகராகவும் கவனிக்க வைத்துள்ளார்.
நடிப்பில் முதலிடம் துப்புறவு தொழிலாளியாக வரும் அபிராமிக்கு, இரண்டாமிடம் மனைவி உயிரை காப்பாற்ற கொலையாளியாகும் பரத்திற்கு, மூன்றாமிடம் கணவன் குடும்பத்திடமிருந்து துன்பங்களை அனுபவிக்கும் அஞ்சலி நாயருக்கு, நான்காமிடம் ஜாதி பிரமுகர் தலைவாசல் விஜய்க்கு. மாநகரம் படத்திற்கு பிறகு வந்திருக்கும் அதே தரத்திலான ஹைபர் லிங் படம்.