ரக்ஷிதா எங்களுக்கு கிடைத்த வரம்: ‘எக்ஸ்ட்ரீம்’ இயக்குனர் பேச்சு

சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘எக்ஸ்டிரீம்’. இம்மாதம் 20ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியதாவது: இப்படம் எங்களது இரண்டாவது படம். நண்பன் ராஜவேல் முதலில் ஒரு கதை சொன்ன போது, அதை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தோம். அந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியது, அதில் என் நடிப்பும் பாராட்டப்பட்டது. பின் நாம் ஏன் படம் எடுக்கக் கூடாதென, ‘தூவல்’ எனும் படத்தை எடுத்தோம், அதுவும் நிறையப் பாராட்டுக்கள் வாங்கியது. அதன் பின்னர், பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி, இந்தக்கதையைச் சொன்னார். உடனே இதை செய்யலாம் என இதை ஆரம்பித்தோம். என்னை போலீஸாக நடிக்கச் சொன்னார், நான் தயங்கினேன், ஆனால் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார், படம் நன்றாக வந்துள்ளது. விரைவில் திரைக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்றார்.

நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி பேசியதாவது: பிக்பாஸ் முடிச்சு வந்தபோது தான் இயக்குநர் எனக்கு போன் செய்தார். அவருக்கு முதலில் என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர் என அருகிலிருந்து பார்த்துள்ளேன். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

படத்தின் இயக்குநர் ராஜவேல் பேசியதாவது: முதலில் ஒரு ஷார்ட் ஃபிலிம் தான் எடுத்தோம் அதற்கே ராஜ்குமார் சார் என்ன கேட்டாலும் தருவார், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். என் டீம் எனக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு குறுகிய காலத்தில், சின்ன பட்ஜெட்டில் படம் செய்ய முடிந்ததற்குக் காரணம் இவர்கள் தான். பெண்களுக்கான படம் இது, தப்பாகப் போய்விடக்கூடாது என்று தயாரிப்பாளர் தெளிவாக இருந்தார். நானும் கண்டிப்பாகத் தவறாகிவிடாது எனச் சொன்னேன். இன்று ஆடியன்ஸ் மாறிவிட்டனர் ஆனால் திரையரங்குகள் மாறவில்லை.

பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதும் வெளியூர்களில், எனது தூவல் படம், இரண்டாவது வாரம் நன்றாக ஓடுகிறது. ஆனால் சென்னையில் திரையரங்குகள் தரவில்லை. உலகநாடுகள் முழுதும் 40 விருதுகள் வழங்கி அங்கீகரித்த திரைப்படம், இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்கள் நல்ல படத்திற்குத் திரையரங்குகள் தருவதில்லை. நல்ல திரைப்படங்களைத் திரையிடுங்கள். எனக்கு இந்தப்படத்தில் கிடைத்த வரம் ரக்ஷிதா மேடம் தான், அவருக்குள் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உப்புக்கருவாடு படத்தில் கலக்கியிருந்தார் அதைப்பார்த்துத் தான் நான் அவரை இப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தேன். அபி நட்சத்திரா, ஆனந்த் நாக் எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளருக்கு வெற்றி வரவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை மனதில் வைத்துத் தான் உழைத்துள்ளோம். ஒரு நல்ல படைப்பு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.