சூது கவ்வும் 3ம் பாகம் வரும்: தயாரிப்பாளர் சி.வி.குமார் உறுதி

2013ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சூது கவ்வும். நலன் குமார் சாமி இலக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி அசோக் செல்வன் பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கி உள்ளார். மிர்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முகா ஃபிலிம்ஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். இம்மாதம் 13ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசியதாவது: பா ரஞ்சித் அவருடைய திருமணத்திற்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அதன் பிறகு அவருடனான நட்பு தொடர்ந்தது. ஒரு நாள் அவர் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. ‘அட்டகத்தி’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன பீட்சா கதை பிடித்தது, அந்த படத்தின் பணிகளையும் தொடங்கினேன்.
இவரிடம் நல்ல ஒரு கதை இருக்கிறது என்று நலன் குமாரசாமியை அறிமுகப்படுத்திய பிறகு கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் சொன்னார். அதன் பிறகு அவர் சொன்ன கதையும் பிடித்தது. ‘சந்தோஷ் நாராயணனை சந்தித்தபோது அவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய திறமை எனக்கு பிடித்திருந்தது, நம்பிக்கையும் இருந்தது. பா. ரஞ்சித் என்னை சந்தித்தபோது இசை யுவன் ஷங்கர் ராஜா தான் வேண்டும் என்று கேட்டார். அவரை சமாதானப்படுத்தி சந்தோஷ் நாராயணனை ஒரு முறை சந்தியுங்கள், அவருடன் பணியாற்றுங்கள், பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதிக் கொடுங்கள் என்று நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை, அதன் பிறகு அவரிடம் கதை கருவை கொடுங்கள். நாங்கள் திரைக்கதை எழுதிக் கொள்கிறோம் என்று நான் அனுமதி கேட்டேன். அர்ஜுன் திறமையான எழுத்தாளர். அவருக்கு கதையைப் பற்றிய அறிவு நிறைய இருக்கிறது. இன்று ஏராளமானவர்களுக்கு காமெடியை காட்சிப்படுத்த தெரியவில்லை. ஆனால் இயக்குநர் அர்ஜுன் அதனை இந்தப் படத்தில் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைகிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் தயாரிப்பாளர் தங்கராஜ் தான். திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது, திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையிலான படம். அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் முன்பே அடுத்த பாகத்திற்கான கதையையும் அர்ஜுன் எழுதிக் கொடுத்து விட்டார். அந்த படமும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.