மழையை பொருட்படுத்தாமல் செல்ல வேண்டிய இடம் ’சொர்க்கவாசல்’

சிறை என்னும் மாய உலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை சொல்கிறது இந்த சொர்க்கவாசல்.

ரோட்டு கடை நடத்தி வருகிறார் ஆர்ஜே.பாலாஜி, உடல்நலமில்லாத அம்மா, கல்யாணம் செய்து கொள்ள தயராக இருக்கும் காதலி சான்யா அய்யப்பன். இவர்கள்தான் அவரது வாழ்க்கை. எளிய வாழ்க்கையில் திடீர் புயலொன்று வீசுகிறது செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார் பாலாஜி. அங்கு பிரபல தாதா செல்வராகவன் தனி ராஜ்யம் நடத்துகிறார். திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் ஷராஃபுதீனுக்கும் மோதல் வெடிக்கிறது. அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? இந்த மோதலுக்குள் சிக்கிய பாலாஜி என்ன ஆனார் என்பதுதான் படம்.

பெரும்பாலான கதை, சிறைக்குள்தான் நடக்கிறது என்றாலும் தெளிவாகவும் சிறப்பான திரைக்கதையிலும் கதை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன், கவனிக்க வைக்கிறார். அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் கைதிகளை எப்படிப் பயன்படுத்தித் தூக்கி எறிகிறார்கள் என்கிற சிறை அரசியலையும் அவர்களின் ஆட்டத்தில் அப்பாவிகள் படும் துன்பத்தையும் சொல்கிறது படம்.

தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் கதை, அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகத்துக்குப் பின் வேகம் எடுக்கிறது. குற்றவாளிகளால் நிரம்பியிருக்கும் சிறைக்குள், அன்பைப் போதிக்கும் வெளிநாட்டு பாதிரியார். வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புகிற ஈழ இளைஞர் சீலன், சமையல் ஏரியா பாலாஜி சக்திவேல், போதைக்கு அடிமையாகி ரோஜாவைத் தேடும் ரவி ராகவேந்திரா, கைதிகளின் குறிப்பறிந்து நடக்கும் ஜெயிலர் கருணாஸ், எப்போதும் முறைப்பும் விரைப்புமாக அலையும் ரவுடி ஹக்கீம் ஷா, வில்லத்தனம் காட்டும் போலீஸ் அதிகாரி ஷராஃபுதீன், திருநங்கை மவுரிஷ் உட்பட அத்தனை கேரக்டர்களும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு, அற்புதம். செல்வராகவன், சிகா என்ற ரவுடி கேரக்டருக்கு அப்படியே பொருந்தி இருக்கிறார். அலட்டல் இல்லாத கருணாஸ் நடிப்பில், யதார்த்தம். சானியா ஐயப்பனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார். பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவும் அதற்கு ஏற்ற கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசையும்.. ஜெயச்சந்திரனின் கலை இயக்கமும் படத்தை தாங்கி பிடிக்கிறது.

மழையையும் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் இந்த சொர்க்கவாசல்

Leave A Reply

Your email address will not be published.