கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘ஜீப்ரா’. தெலுங்கு நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நடிகர் டாலி தனஞ்சயா ஆகியோருடன் பிரியா பவானி சங்கர், சத்யராஜ் நடித்திருந்தனர். கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குவின் படத்தை இயக்கிய ஈஸ்வர் கார்த்திக் இயக்கி இருந்தார். இந்த படம் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பேசியதாவது: இங்கு தான் என் பயணம் தொடங்கியது. இங்கு நான் மற்ற படங்களின் விழாக்களை வேடிக்கை பார்த்துள்ளேன். என் முதல் படம் ‘பென்குவின்’ கொஞ்சம் தவறிவிட்டது. அதன் முழுப்பொறுப்பும் எனக்குத் தான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத் திருத்திக்கொண்டு தான், இந்தக்கதையைத் துவங்கினோம். பென்குவின் என்னை மைனஸ் 1 க்கு கொண்டு சென்று விட்டது. அதிலிருந்து மீண்டு வர ஒரே ஒரு முறை வேறு ஒரு கதை செய் என எல்லோரும் சொன்னார்கள் சரி செய்வோம் என்று தான் இந்தக்கதை ஆரம்பித்தது. பாலா சார், தினேஷ் சார் இருவரிடம் கதை சொன்ன போது, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன், உடனே செக் தந்தார்கள் எனக்குக் கனவு மாதிரி இருந்தது. இந்தப்படம் இங்கு தான் செய்வதாக இருந்தது. ஆனால் அப்போது ஃபினான்ஸியலாக முடியவில்லை, அதனால் தெலுங்குக்குப் போனது. அங்கிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செய்தோம். தியேட்டரில் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி உங்களால் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் சத்ய தேவ் பேசியதாவது: தமிழ்நாட்டுடன் எனக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. தமிழ்ப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படம் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஜீப்ரா மூலம் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. உங்கள் பாராட்டுக்கள் பெரிய ஊக்கம் தந்துள்ளது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. சீக்கிரம் தமிழ் கத்துக்கிறேன்.
இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இயக்குநர் ஈஸ்வர் இந்தப்படத்திற்கு 800 பக்க திரைக்கதை எழுதியிருந்தார். அவர் மியூசிக், ரசிகர்கள் ரியாக்சன் முதற்கொண்டு டீடெயிலாக எழுதியிருந்தார். அவர் எழுதியது அப்படியே தியேட்டரில் நடந்தது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார்.
தயாரிப்பாளர் பால சுந்தரம் பேசியதாவது: நான் கடலூர்க்காரன், ஓல்டவுன் எங்கள் ஊர், அதை எங்காவது கொண்டு வந்துவிடுவோம் என்று தான் இந்த டைட்டில். ஈஸ்வர் இந்தக்கதை சொன்னவுடன் கண்டிப்பாக இதை நாம் செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. தினேஷ் தான் புரடக்சனுக்கு என்னை இழுத்து விட்டார். இந்தக்கதை கேட்டவுடன், இதை எப்படியாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைத்தோம். தமிழ் மலையாளம் எல்லாம் சேர்த்துத் தான் செய்ய நினைத்தோம். ப்ளான் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே நிறையப் பிரச்சனை. இந்தக்கதையைத் தமிழில் எல்லா நடிகர்களிடமும் சொல்லியுள்ளோம். இந்தக்கதையில் ஒரு வரி மாற்றக்கூடாது அதை ஒத்துக்கொள்பவர்கள் தான் நடிகர்கள் என முடிவு செய்தோம். சத்ய தேவ் அவ்வளவு உற்சாகமாக வேலை செய்தார். ஈஸ்வர் மாதிரி ஒரு உழைப்பாளி இருக்க முடியாது. அசுரத்தனமாக உழைத்தார்.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது: நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார். படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி.