எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டூடீயோ சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி. சமய முரளி, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள படம் “சைலண்ட்” . இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். மதியழகன் , ஆரத்யா, முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், திரு நங்கை நமீதாமாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். சேயோன் முத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சமயமுரளி இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குனர் கணேசா பாண்டி பேசியதாவது: சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும்.
உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் படம்தான் சைலன்ட். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிடுகிறோம். என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது: சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.
நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள். இப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது: இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம். இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார்.
இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச் சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம் வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வர வில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர் முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். என்றார்.