உலக பிரச்சினைகள் வீட்டுக்குள் நடந்தால்…: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ படத்தின் கதை
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு, படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.
விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ் பேசியதாவது: எனக்கு சிறு வயதிலிருந்து படம் பார்க்க வேண்டும், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் நாம் எடுக்கும் படம் சாதாரணமாக இருந்து விடக்கூடாது, சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று நினைத்த போது, கிடைத்த கதை தான் இது.
இந்த இருப்பதோராவது நூற்றாண்டிலும், காதலிக்கும் காதலர்களுக்கு இருக்கும் ஜாதிய சமூகப்பிர்ச்சனையை, எங்களின் இந்த படத்தில் அழுத்தமாக பேசியுள்ளோம். அண்ணன் திருமாவின் கையால் இந்த இசை விழா நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அண்ணன் வந்து வாழ்த்தியது எங்களுக்குப் பெருமை. என்றார்.
இயக்குநர் பிளஸ்ஸோ ராய்ஸ்டன் பேசியதாவது: இப்படம் 6,7 ஆண்டுகள் கஷ்டபட்டு கிடைத்த வாய்ப்பு. நாம் ஒரு படம் செய்தாலும் அதில் சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்று தான் இப்படத்தை எடுத்தோம். நானும் என் நண்பர் கவிதினேஷ்குமார் அவர்களும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக இணைந்து செயல் படுவோம் என சொல்லி வைத்திருந்தோம். அதே போல் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் இருவரும் பேசியபோது, உலகம் முழுக்க இருக்கும் இந்த பிரச்சனையை ஒரு வீட்டுக்குள் நடப்பதாக செய்வோம் என்று தான் இந்தக்கதையை உருவாக்கினோம். இப்படத்தில் எல்லோருமே புதுமுகங்கள். எங்களுக்காக கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு கருத்தாக உங்களுக்காக உருவாக்கப்பட்ட படைப்பு. என்றார்.