பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இந்த படத்தில் அபிராமி, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் போன்ற படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் இயக்கி இருக்கிறார். பத்ரிகையாளர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘போலீஸ்காரன கட்டிகிட்டா…’ பாடல் வைரலாகியிருக்கும் நிலையில் வெளிவந்திருக்கும் படம், அந்த பாடலின் வெற்றிக்கு நியாயம் செய்திருக்கிறதா?
முதலில் கதையை பார்க்கலாம்… பவானியின் (மடோனா) குடும்பம் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஏமாற்றுகிறார். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விடுகிறார்கள். இதனால் பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
எம்.எல்.ஏ ஆட்கள் கடையை உடைத்து நாசமாக்கி விடுவதால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே தாத்தா, வழக்கறிஞர் பூங்குன்றனை (பிரபுதேவா) சந்தித்து பிரச்சனையை சொல்ல சொல்கிறார். பவானி குடும்பமும் பூங்குன்றனின் உதவியை கேட்டு போகிறார்கள். ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள்.
அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பவானி குடும்பம் முயற்சிக்கிறது.
ஆனால் பூங்குன்றன் பெயரில் 10 கோடி ரூபாய் வங்கியில் இருக்கிறது. பலகுரலில் பேசும் சக்தி வாய்ந்த பவானி, யாருடைய கையெழுத்தையும் போடும் திறமை கொண்ட அவரது தங்கை, ரோபாட்டிக் திறன்மிக்க இன்னொரு தங்கை இவர்கள் தங்கள் திறமையை கொண்டு, பூங்குன்றனை பயன்படுத்தி அந்த 10 கோடியை எடுக்க முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா? பூங்குன்றன் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் கதை.
முதல் பாராட்டு பிரபுதேவாவிற்கு பெரிய ஹீரோவாக இருந்தும் படம் முழுக்க பிணமாக நடித்து சாதன படைத்திருக்கிறார். காமெடி கலாட்டாக்ளுக்கு மத்தியில், கட்டிளம் பெண்க்ளுக்கு மத்தியில் வெகு அமைதியாக நடித்திருக்கிறார். இன்னும் சில காலம் பிரபுதேவா நடிப்பு பாராட்டப்படும்.
மடோனா அழகு காட்டுகிறார், அபிராமி அனுபவ நடிப்பை காட்டுகிறார். மற்ற இரு ஹீரோயின்களுக்கு பெரிதாக வேலை இல்லை. அஸ்வின் விநாயக மூர்த்தியின் இசை படத்திற்கு பலம். ஒளிப்பதிவும் கலர்புல்லாக இருக்கிறது. போலீஸ்காரன கட்டிகிட்டா பாடல் படத்திற்கான முக்வரியாக அமைந்திருக்கிறது. பாடலை எழுதிய ஜெகன் கவிராஜ் ஜாதி தலைவராகவும் நடித்து நடிகராகவும் கவனம் பெறுகிறார்.
‘படத்தில் லாஜிக் பார்க்காதீர்கள், ஜாலியா சிரிச்சுட்டு போங்க’ன்னு தொடக்கத்திலேயே இயக்குனர் சொல்லி விடுகிறார். சில குறைகள் இருந்தாலும் படம் சிரிக்க வைக்கத் தவறவில்லை.