மிக மிக அவசரம், மாநாடு படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க சமுத்திரக்கனி இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது: தம்பி உமாபதி சுய ஒழுக்கம் உள்ள ஒரு இளைஞர். அவருக்கு ஒரு காதல் இருந்தது என்பதெல்லாம் அப்புறம்தான் எனக்கு தெரியவந்தது. ஆனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து அது ஐஸ்வர்யா தான் கண்டுபிடித்து விட்டேன். இந்த படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக கிளம்பி சென்றார்கள். அப்போது நான் கவனித்த விஷயம் என்னவென்றால் இந்த படத்திற்கான ஆய்வுகளை எல்லாம் செய்தது உமாபதிதான். அதன் பிறகு தான் தம்பி ராமையா அண்ணனை அழைத்து நீங்கள் நடிக்கிறீர்கள், பாட்டு எழுதுகிறீர்கள், இசையும் அமைக்கிறீர்கள். அதனால் உமாபதி டைரக்ட் பண்ணட்டுமே என்று கூறினேன். அதை பெருந்தன்மையாக அவர் எடுத்துக் கொண்டார்.
இந்த படம் தான் உமாபதிக்கு உச்சம் என சொல்ல மாட்டேன். இதுவும் ஒரு படம். ஆனால் அவரிடம் இன்னும் அதிக படைப்புத்திறமை ஒளிந்திருக்கிறது. அதற்கான படம் நிச்சயமாக அடுத்த அமையும் என நம்புகிறேன். மாநாடு படத்தின் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டிடம் உதவியாளராக பணியாற்றிய கேதரின் சுறுசுறுப்பும் திறமையும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. உமாபதியின் வயசுக்கு அவர் சரியாக செட்டாவார் என முடிவு செய்து அவர்கள் இருவரையும் இணைத்து விட்டேன். இயக்குனர் மணிவண்ணன், ராம் ஆகியோருக்கு அடுத்ததாக நான் வியந்தது தம்பி ராமையாவை பார்த்து தான். ஸ்கிரிப்டை கையில் வைத்துக்கொள்ளவே மாட்டார். வசனம் அது பாட்டுக்கு கொட்டும். அது அவரே எழுதியதால் மனதில் ஊறி போய்விட்டது.
மாநாடு சமயத்தில் எனக்கு போன் செய்து வாழ்த்தியது இரண்டு நடிகர்கள் மட்டுமே ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதன் பிறகு சோசியல் மீடியாக்களில் கூட அவரை சமூக கருத்து சமுத்திரக்கனி என்று சொல்வதை பார்த்திருக்கிறேன் எல்லோராலும் அப்படி கருத்து சொல்லி விட முடியாது. கருத்து சொல்வதற்கு என்று ஒரு தனித்தன்மை வேண்டும். மிஸ்கின் சமுத்திரக்கனி இருவருமே உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. சமீபத்தில் என்னை கவர்ந்த இருவர் இவர்கள்தான். தம்பி ராமையா தான் கதாநாயகன் என தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட சுவேதா, சுபா இருவருக்கும் நன்றி. எப்போதும் ஸ்கிரிப்ட்டை தான் நம்பி நடிக்க வேண்டும்.
நம் பக்கத்தில் இருப்பவர்களின் அருமை நமக்கு பெரும்பாலும் தெரியாது. அப்படித்தான் என் அலுவலகத்தில் பணி புரியும் பிரவீன் இவ்வளவு நடிப்பான் என தெரியாது. நம் கூட இருப்பவர்கள் அடுத்த லெவலுக்கு வளரும் போது அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. என்னுடைய அன்பு தம்பி கிரிஷ்ஷை அருமையான பாடகராக பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் ஒரு அற்புதமான நடிகராக மாறி இருக்கிறார். ரகுவரனின் இன்னொரு வெர்ஷனாக அவரை பார்ப்பீர்கள். அவரது மனைவி சங்கீதாவிடம் இவர் சிறப்பாக நடித்திருப்பதாக சொன்னால் நம்பவே மாட்டேன் என்றார். படம் எடுப்பது மட்டுமே எங்களது வேலை. அது நல்ல படமா இல்லையா என்பதை அதன் வெற்றி மட்டும் தான் தீர்மானிக்கிறது. அதன் பட்ஜெட் தீர்மானிக்காது. இந்த படம் ஒரு மனிதனின் வாழ்வியல். இது மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.
==============