25 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்ததை சாதித்த தயாரிப்பாளர்

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்து, நடித்துள்ளார்.

இப்படத்தில்  முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படத்திற்கு ஆர்.ஜே.ரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ஸ்ரவன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளரும் நடிகருமான கார்த்திகேசன் பேசியதாவது:

நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து  திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம் .அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன்.

தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால்தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.

நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது. என்றார்.

இயக்குனர் மணி மூர்த்தி பேசியதாவது: இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம் .எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது  அவர்  என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர்  என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள்.அதனால்தான் குறுகிய காலத்தில்  நிறைய வேலை செய்ய முடிந்தது . அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது .

சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை  சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.அவர்களுக்கு நன்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.