பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜாலியோ ஜிம்கானா’ சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் மற்றும் நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். படம் நாளை வெளியாகிறது.
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா பேசும்போது “நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கிறோம்”என்றார்.
நடிகை மடோனா செபாஸ்டின் பேசும்போது “‘ஜாலியோ ஜிம்கானா’ ஒரு ஜாலியான படம். பிரபு மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சக்தி சிதம்பரம் சார் படம் இயக்குவதில் மாஸ்டர். அபிராமி, ரோபோ சங்கர் உள்ளிட்டப் பலருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.
இயக்குநர் சக்தி சிதம்பரம், பேசும்போது “கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. அப்போதுதான், டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம். ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. இதற்கான ஸ்க்ரீன்பிளே எழுதுவது எளிது கிடையாது. டெட்பாடியாக மாஸ்டர் இருக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் மாஸ்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒன்றரை நாளில் நடக்கும் கதையில் பிரபுதேவா 110 நிவீடங்கள் பிணமாக நடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும்” என்றார்.