கோவாவில் வாழ்ந்து வரும் பிரான்சிஸ் (சூர்யா) பணத்துக்காக, காவல் துறை கைகாட்டும் குற்றவாளிகளை பிடித்து தருகிறவர். முக்கிய குற்றவாளி ஒருவரை பிடிக்க செல்லுமிடத்தில் அவரை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அதனை ஒரு சிறுவன் பார்த்து விடுகிறான்.
இருவருக்குள்ளும் முன்ஜென்ம பந்தம் ஒன்று இருப்பதை உணரும் பிரான்சிஸ், அந்தச் சிறுவனை கொல்ல துடிக்கும் கூட்டத்திலிருந்து மீட்க போராடுகிறார்.
இந்த கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதை. 1070-களில் பெருமாச்சி என்ற கிராமத்தில் வாழ்ந்த இனக்குழுவின் வாழ்க்கை. குழுவின் தலைவனான சூர்யா எதிர் நாட்டு மோசமான தலைவர் பாபி தியோலை எதிர்த்து போராடுகிறார். அதோடு தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை மகனாக வளர்க்கிறார். இந்த இரண்டு கதைக்கும் என்ன சம்பந்ததம் என்பதுதான் திரைக்கதை.
1070 மற்றும் 2024 என இரு வேறு காலக்கட்டத்தையும் எடுத்துக்கொண்டு அதை ‘நான் லீனியர்’ முறையில் காட்சிகளை முன்னுக்குப் பின் கலைத்துபோட்டு விளையாடியிருக்கிறார் சிறுத்தை சிவா.
படத்தின் பிரதான களமான 1070 காலக்கட்டத்தையும், அதில் வாழும் இனக்குழுவையும், போரை உள்ளடக்கிய அவர்களின் வாழ்வியலையும், வெவ்வேறு இனக்குழுவுக்குள் நடக்கும் மோதல்களையும், பிரமாண்ட மேக்கிங்கில் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
கடலில் நடக்கும் சண்டைக் காட்சிகள், பாம்புகள் கொண்டு எதிரிகளை தாக்கும் யுக்தி, பெண்கள் மட்டுமே தனித்து நின்று போரிடுவது என மேக்கிங், தொழில்நுட்ப ரீதியாக படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. தவிர, கலை ஆக்கம், சிகை அலங்கார குழுவினரின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது.
பழங்குடியின போர்வீரனாக தோற்றத்திலும் ஆக்ரோஷத்திலும் மிரட்டுகிறார் சூர்யா, உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு தன்னுடைய நடிப்பால் உயிர் கொடுக்கிறார். மறுபுறும் ஜாலியாக சேட்டை செய்யும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். மொத்தப் படத்தையும் ஒரே ஆளாக தோளில் சுமந்து கரை சேர்க்கிறார்.
காதலுக்காக திஷா பதானி, காமெடிக்காக யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ. மிரட்டலான உடலமைப்புடன், தான் சார்ந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார் பாபி தியோல். தவிர்த்து, கலைராணி, நட்டி, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், போஸ் வெங்கட், ஹரீஷ் உத்தமன் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசை ஓகே. படத்தின் மேக்கிங் அசத்தினாலும், கதையை சொன்ன விதத்தில் விறுவிறுப்பு மிஸ்சிங். என்றாலும் ஒன் டைம் வாட்ச் மூவிதான்.