3 ஆயிரம் பேரின் உழைப்பில் உருவான கங்குவா: சூர்யா பெருமிதம்

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது: சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இதுதான்.

சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான்.11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகியிருந்தால் நமக்கு 4000 ஸ்கிரீன்ஸ்தான் கிடைத்திருக்கும். பான் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இது அடுத்த வெலவல் பாய்ச்சலாக இருக்கும். என்றார்.
இயக்குநர் சிவா பேசியதாவது: கங்குவா கதையை எழுதும்போது இதை நம்மால் எடுக்க முடியுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், என் டீம் மீது இருந்த நம்பிக்கையால் ’கங்குவா’ என் வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக இருக்கும் எனத் தோன்றியது. கங்குவா’ படம் தொடர்பாக நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது அன்பான ரசிகர்கள் எல்லோருமே ‘அண்ணனுக்கு ஒரு வெற்றிப்படம் வேண்டும்’ எனக் கேட்டார்கள். நிச்சயம் ‘கங்குவா’ அப்படியான படமாக அமையும். நான்கு மணிக்கு எழுந்து மலை, காடு என நாங்கள் கூட்டிப்போனாலும் முழு உழைப்பைக் கொடுத்தார். என்றார்.

நடிகர் சூர்யா பேசியதாவது: ’கங்குவா’ போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம். 170 நாட்களுக்கும் மேல் இந்த படத்தை எடுத்திருப்போம். ’கங்குவா’ படத்தில் அனைவரது உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. வெற்றியுடைய ஒளிப்பதிவு நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிதாக பேசப்படும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன்னால் நான் பத்தாவது மாடியில் இருந்து கூட குதிப்பேன். அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை எனக்கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு கதை வைத்து அசத்திவிடுவார். படத்தின் ஆன்மா இசைதான். அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

வழிபடக்கூடிய கடவுள் நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம். ‘கங்குவா’ திரைப்படம் வெறுமனே ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பை பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும். ’கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 3000 பேரின் உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். படம் நெருப்பு மாதிரி இருக்கும். உங்கள் அன்பு ‘கங்குவா’ படத்திற்கு தேவை. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.